ராயபுரத்தில் சிலை திருட்டு வழக்கில் மேலும் ஒருவர் கைது கடையில் பதுக்கிய விநாயகர் சிலை மீட்பு
ராயபுரத்தில் கோவில் சிலை திருடப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர். விற்பனைக்காக கடையில் பதுக்கி வைத்திருந்த விநாயகர் சிலையையும் போலீசார் மீட்டனர்.
திருவொற்றியூர்,
சென்னை ராயபுரம் செட்டித்தோட்டம் பகுதியில் உள்ள குடிசைக்குள் குப்பைகளுக்கு இடையே பிளாஸ்டிக் சாக்கு பையில் சுற்றப்பட்ட நிலையில் 3 அடி உயர அர்ஜூனன் உலோக சிலையை போலீசார் அண்மையில் மீட்டனர். இந்த சிலையை திருடியதாக மார்க்கெட் லைன் பகுதியை சேர்ந்த கணேசன் (வயது 25) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் ராயபுரம் எம்.எஸ்.கோவில் தெருவில் உள்ள பாழடைந்த கோவிலில் இருந்து அந்த சிலையை திருடி வந்ததாக தெரிவித்தார். கணேசன் குறிப்பிட்ட கோவிலுக்கு சென்ற போலீசார், அங்கிருந்த 2½ அடி உயரமும், 30 கிலோ எடையும் உள்ள திரவுபதி சிலை ஒன்றையும் மீட்டனர். சிலைகள் இருந்த கோவில் தனியாருக்கு சொந்தமானதாகும். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வந்தது.
இந்தநிலையில் கணேசனின் கூட்டாளி திருவொற்றியூர் கன்னி கோவில் தெருவை சேர்ந்த மணி என்கிற நிறுத்தி மணி (28) என்பவரை பிடித்து விசாரித்தபோது, ஏற்கனவே இதே கோவிலில் இருந்து 2 அடி உயரம் உள்ள 20 கிலோ எடை கொண்ட விநாயகர் சிலையை திருடி விற்பனைக்காக எர்ணாவூர் பகுதியில் உள்ள ஒரு கடையில் மறைத்து வைத்து இருப்பதாக தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் அந்த சிலையையும் மீட்டனர். மேலும் மணியை கைது செய்தனர். தொடர்ந்து பாழடைந்த கோவிலின் உரிமையாளர்களான வேதாச்சலம் நாயக்கர் கன்னியம்மாள் குடும்பத்தினரை அழைத்து விசாரணை நடத்தினர்.
அப்போது தங்கள் பரம்பரை சொத்தான அந்த இடத்தில் தங்கள் குடும்பம் சார்பில் தர்மராஜா கோவில் கட்டி பூஜை நடத்தி வந்ததாகவும், அந்த கோவிலில் அர்ஜூனன், திரவுபதி மற்றும் விநாயகர் ஐம்பொன் சிலைகள் வைத்து வழிபட்டதாகவும், தற்போது தாங்கள் வேறு வேறு பகுதியில் வசித்து வருவதால் அதை பராமரிக்க முடியாமல் போட்டுவிட்டதாகவும் தெரிவித்தனர்.
மேலும் 3 சிலைகளையும் ஒரு மரப்பெட்டியில் வைத்து கருவறையில் வைத்து இருந்ததாகவும், அதைத்தான் திருடி சென்றுள்ளனர் என்றும் தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார் மீட்கப்பட்ட 3 சிலைகளையும் கோர்ட்டில் ஒப்படைத்தனர்.