பழனி கோவில் கிரிவலப்பாதை ஆக்கிரமிப்புகளை இன்றைக்குள் அகற்ற வேண்டும் திண்டுக்கல் கலெக்டருக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
பழனி கோவில் கிரிவலப்பாதை ஆக்கிரமிப்புகளை இன்று மாலைக்குள் அகற்ற வேண்டும் என்று திண்டுக்கல் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
சென்னை திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–
பழனி தண்டாயுதபாணி கோவிலுக்கு ஆண்டுதோறும் பல லட்சம் பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆனால் பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் வசதிக்காக எவ்வித அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை. பழனி கோவிலுக்கு சொந்தமான நிலங்கள், நீர் நிலைகளை ஆக்கிரமித்து கடைகளை அமைத்துள்ளதால் பக்தர்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. மேலும் இங்கு பொதுமக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும் மனு அனுப்பினேன். எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்டு பக்தர்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த உத்தரவிட வேண்டும் என தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே கோர்ட்டு உத்தரவை பின்பற்றாத திண்டுக்கல் மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு, பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர், நாளை (அதாவது இன்று) மாலை 4 மணிக்குள் பழனி கோவில் மற்றும் கிரிவலப்பாதையை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற திண்டுக்கல் மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.