“பிரேத பரிசோதனை அறிக்கைகள் தாமதப்படுத்தப்படுகின்றன” ஐகோர்ட்டில், தடயவியல் நிபுணர் தகவல்


“பிரேத பரிசோதனை அறிக்கைகள் தாமதப்படுத்தப்படுகின்றன” ஐகோர்ட்டில், தடயவியல் நிபுணர் தகவல்
x
தினத்தந்தி 19 March 2019 10:49 PM GMT (Updated: 19 March 2019 10:49 PM GMT)

பிரேத பரிசோதனை அறிக்கைகள் தாமதப்படுத்தப்படுகின்றன என்று மதுரை ஐகோர்ட்டில் தடயவியல் நிபுணர் தெரிவித்தார்.

மதுரை,

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த வக்கீல் அருண்சுவாமிநாதன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘பல்வேறு முறைகேடுகளை தவிர்க்க, அரசு ஆஸ்பத்திரிகளில் நடக்கும் பிரேத பரிசோதனைகளை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும் என்று ஏற்கனவே ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை உடனடியாக அமல்படுத்த உத்தரவிட வேண்டும்‘ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, அரசு ஆஸ்பத்திரிகளில் நடக்கும் அனைத்து பிரேத பரிசோதனைகளையும் வீடியோ பதிவு செய்ய உத்தரவிட்டிருந்தது.

இந்தநிலையில் அந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மூத்த தடயவியல் துறை அலுவலர் லோகநாதன் நேரில் ஆஜரானார். அவரது பணி என்ன என்று நீதிபதிகள் கேட்டனர்.

அதற்கு அவர், டாக்டர்கள் சொல்லும் வேலையை செய்கிறோம் என்றார்.

நீதிபதிகள் மருத்துவ தடயவியல் துறை அலுவலர்களின் பணி என்ன? அந்த பணிக்கான கல்வித் தகுதி என்ன? என்பது பற்றி தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

பின்னர் லோகநாதனிடம், பிரேத பரிசோதனை அறிக்கை அளிப்பதில் தாமதம் ஏற்பட காரணம் என்ன? என நீதிபதிகள் கேட்டனர். அதற்கு அவர், “சில வழக்குகளில் குற்றங்களை மறைக்கும் வகையில் தாமதமாக பிரேத பரிசோதனை அறிக்கை அளிக்கப்படுகிறது. இதன்காரணமாக, அனைத்து அறிக்கைகளும் தாமதப்படுத்தப்படுகின்றன. டாக்டர்கள் முறையாக தங்களது பணியை செய்வதில்லை. தானமாக பெறப்படும் உடல் உறுப்புகளை தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு அளிப்பதிலும் முறைகேடுகள் நடக்கின்றன“ என்றார்.

அதற்கு நீதிபதிகள், அரசு ஆஸ்பத்திரிகளுக்கு தேவையில்லை என்றால் மட்டுமே உடல் உறுப்புகள் தனியாருக்கு வழங்க வேண்டும். ஆனால் அரசு ஆஸ்பத்திரிகளில் சென்னையில் 7-க்கும் அதிகமான அரசு ஆஸ்பத்திரிகள் இருக்கின்றன. அப்படி இருக்கும்போது அரசு ஆஸ்பத்திரிகளில் தானமாக பெறப்படும் உடல் உறுப்புகள் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு வழங்கப்படுவது எப்படி? என கேள்வி எழுப்பினர். பின்னர் அரசு ஆஸ்பத்திரிகளில் எத்தனை பிரேத பரிசோதனைகள் நடந்துள்ளன. அவற்றில் எத்தனை வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற விவரத்தை அறிக்கையாக தமிழக அரசு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் மாதம் 4-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Next Story