வாகன சோதனை: வெவ்வேறு இடங்களில் ரூ.6½ லட்சம் பறிமுதல் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை


வாகன சோதனை: வெவ்வேறு இடங்களில் ரூ.6½ லட்சம் பறிமுதல் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 20 March 2019 11:00 PM GMT (Updated: 20 March 2019 8:26 PM GMT)

குளித்தலை அருகே வெவ்வேறு இடங்களில் நடந்த வாகன சோதனையில் 4 பேரிடமிருந்து ரூ. 6½ லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனர்.

குளித்தலை,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18 -ந்தேதி நடக்கிறது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக்குழு ஆகியவை அமைக்கப்பட்டு வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள கீழகுறப்பாளையம் பிரிவு சாலை அருகே தேர்தல் பறக்கும்படை அதிகாரி ராஜேந்திரன் தலைமையிலான பறக்கும்படை அதிகாரிகள் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த மினி லாரியின் டிரைவரான குளித்தலை அருகே உள்ள இனுங்கூரை சேர்ந்த பாலமுருகன் (வயது 35) என்பவரிடம் ரூ. 1 லட்சத்து 32 ஆயிரம் இருந்தது தெரியவந்தது. அப்போது அவர் கேரள மாநிலத்தில் வாழைத்தார்கள் இறக்கிவிட்டு அதற்கான தொகையை பெற்றுக்கொண்டு திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலைக்கு சென்று கொண்டிருப்பதாக கூறியுள்ளார். இருப்பினும் அவர் வைத்திருந்த பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதைபோல அதேசாலையில் வந்த சரக்கு வேனை பறக்கும்படை அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது இந்த வேனின் டிரைவரான திருச்சி மாவட்டம் சிறுகாம்பூரைச் சேர்ந்த சுரேஷ்குமார் (34) என்பவரிடம் ரூ. 1 லட்சத்து 61 ஆயிரம் இருந்தது தெரியவந்துள்ளது. இவரும் கேரள மாநிலப்பகுதியில் வாழைத்தார் லோடு இறக்கிவிட்டு அதற்கான தொகையை பெற்று திருச்சி மாவட்டம் முக்கொம்புக்கு சென்று கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். இருப்பினும் அவர் வைத்திருந்த தொகைக்கு உரிய ஆவணம் இல்லாத காரணத்தால் அந்ததொகையை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதனைதொடர்ந்து அந்த வழியாக வந்த மற்றொரு சரக்கு வேனை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். இந்த வேனில் வந்த கேரளமாநிலம் எர்ணாகுளம் ஓடனமங்கலம் பகுதியை சேர்ந்த ஷானவாஸ் (37) என்பவரிடம் ரூ. 1 லட்சத்து 90 ஆயிரம் இருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரித்தபோது அவர் எர்ணாகுளத்தில் இருந்து திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை பகுதிக்கு வாழைத்தார் லோடு ஏற்ற வந்ததாக கூறியுள்ளார். இருந்தபோதிலும் அவர் கொண்டு வந்த தொகைக்கு உரிய ஆவணம் இல்லாத காரணத்தால் அதிகாரிகள் அவரிடமிருந்த தொகையை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் குளித்தலை அருகே உள்ள மைலாடி பகுதியில் தேர்தல் பறக்கும்படை அலுவலர் குமார் தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரிடம் சோதனை செய்ததில் அவரிடம் ரூ. 1 லட்சத்து 59 ஆயிரத்து 380 இருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அவரிடம் விசாரித்தபோது அவர் கரூர் மாவட்டம் நாச்சிப்பட்டியைச் சேர்ந்த சுப்பையா என்றும், தோகைமலை அருகே கொசூரில் உள்ள பெட்ரோல் பங்கில் மேலாளராக இருப்பதாக கூறியுள்ளார். இருப்பினும் அவரிடமிருந்த பணத்திற்கு போதிய ஆவணம் இல்லாத காரணத்தால் அவரிடமிருந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பின்னர் பறக்கும்படை அதிகாரிகளால் 4 பேரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மொத்தம் ரூ.6 லட்சத்து 42 ஆயிரத்து 380-ஐ குளித்தலை கோட்டாட்சியரும், உதவி தேர்தல் அலுவலருமான லியாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. 

Next Story