உயர் மின்கோபுர திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்காளர் அடையாள அட்டைகளை மனு பெட்டியில் போட்ட விவசாயிகள் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு


உயர் மின்கோபுர திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்காளர் அடையாள அட்டைகளை மனு பெட்டியில் போட்ட விவசாயிகள் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 20 March 2019 11:00 PM GMT (Updated: 20 March 2019 10:25 PM GMT)

உயர் மின்கோபுர திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்காளர் அடையாள அட்டைகளை மனு போடும் பெட்டியில் விவசாயிகள் போட்டதால் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு,

தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் மற்றும் பவர் கிரிட் நிறுவனம் ஆகியவை மூலம் உயர் மின்கோபுரங்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. திருவண்ணாமலை, ஈரோடு, நாமக்கல், திருப்பூர் உள்ளிட்ட 13 மாவட்டங்கள் வழியாக இந்த உயர் மின்கோபுரங்கள் அமைக்கப்படுகின்றன. இந்த திட்டத்தால் விவசாய நிலங்களும், விவசாயிகளும் பாதிக்கப்படுவதாக கூறி உயர் மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உயர் மின்கோபுரங்களால் பாதிக்கப்பட்டு உள்ள விவசாயிகள் சார்பில் ஆண், பெண் விவசாயிகள் சிலர் ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். உயர் மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் எஸ்.பொன்னுசாமி, வி.பி.குணசேகரன் ஆகியோர் தலைமையில் வந்த விவசாயிகள் உயர் மின்கோபுர திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தங்கள் வாக்காளர் அடையாள அட்டைகளை திரும்ப வழங்க உள்ளதாக தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுதொடர்பாக அவர்கள் கலெக்டருக்கு வழங்க கொண்டு வந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:–

சென்னை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு விரோதமாக விளைநிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். பொய் வழக்கு போடப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள வக்கீல் ஈசன் உள்ளிட்ட விவசாய சங்கத்தலைவர்கள் மற்றும் விவசாயிகள் 12 பேரை உடனே விடுதலை செய்ய வேண்டும். முதலியாக்கவுண்டன் வலசு, எழுமாத்தூர், முத்தாயிபாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். தேர்தல் முடியும் வரை உயர் மின்கோபுரங்கள் அமைக்கும் பணிகளை நிறுத்தி வைக்கவேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகள் அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால் அவர்கள் கலெக்டர் உள்பட உயர் அதிகாரிகளிடம் கோரிக்கை மனுவை வழங்க முடியவில்லை. எனவே அவர்கள் மக்கள் குறைதீர்க்கும் நாளின்போது பொதுமக்கள் கோரிக்கை மனுக்கள் போடும் பெட்டியில் கோரிக்கை மனு மற்றும் தங்களின் வாக்காளர் அடையாள அட்டைகளை போட்டனர். 6 பெண்கள் உள்பட 16 பேர் தங்கள் வாக்காளர் அடையாள அட்டைகளை மனுபோடும் பெட்டியில் போட்டனர்.


Next Story