மாவட்டத்தில் பறக்கும்படையினர் சோதனை: டைல்ஸ் நிறுவன உரிமையாளர், வியாபாரியிடம் ரூ.7.94 லட்சம் பறிமுதல்


மாவட்டத்தில் பறக்கும்படையினர் சோதனை: டைல்ஸ் நிறுவன உரிமையாளர், வியாபாரியிடம் ரூ.7.94 லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 21 March 2019 4:02 AM IST (Updated: 21 March 2019 4:02 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படையினர் சோதனையின் போது டைல்ஸ் நிறுவன உரிமையாளர், வெங்காய வியாபாரி ஆகியோர் கார்களில் ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.7 லட்சத்து 94 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

சேலம்,

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க சேலம் மாவட்டத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சேலம் டவுன் ரெயில் நிலையம் அருகே பறக்கும்படை அலுவலர் சுந்தர்ராஜன் தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் செவ்வாய்பேட்டையை சேர்ந்த ஆதேஷ்(வயது 45) என்பவர் உரிய ஆவணமின்றி ரூ.6 லட்சத்து 86 ஆயிரத்து 800 கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

டைல்ஸ் நிறுவனம் நடத்தி வரும் ஆதேஷ் அதிகாரிகளிடம் இது தொடர்பாக விளக்கம் அளித்தார். அப்போது அவர், கடையில் விற்பனையான பணத்தை வங்கியில் செலுத்துவதற்கு கொண்டு செல்வதாக கூறினார். ஆனால் அவரிடம் உரிய ஆவணம் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து வடக்கு சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலரான செழியனிடம் ஒப்படைத்தனர்.

இதேபோன்று தாரமங்கலம் அருகே கே.ஆர்.தோப்பூர் பவர்கேட் பகுதியில் பறக்கும்படை அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி அதிகாரிகள் சோதனை நடத்தினர். அந்த காரில் ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தை சேர்ந்த வெங்காய வியாபாரியான யுவராஜ்(27) என்பவர் ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்தை உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து அவரிடம் அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது அவர், தனது அக்காள் சேலத்தில் வசித்து வருவதாகவும், அவரது மகளின் திருமண சீர்வரிசைக்காக பணத்தை கொண்டு செல்வதாக அதிகாரிகளிடம் கூறினார். அவரிடம் உரிய ஆவணம் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து துணை தாசில்தார் ஸ்ரீதரனிடம் ஒப்படைத்தனர். மேலும் உரிய ஆவணங்களை காண்பித்துவிட்டு பணத்தை பெற்று செல்லுமாறு யுவராஜிடம் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.


Next Story