நாகர்கோவிலில் அரசியல் கட்சி கொடி கம்ப பீடங்கள் இடித்து அகற்றம்


நாகர்கோவிலில் அரசியல் கட்சி கொடி கம்ப பீடங்கள் இடித்து அகற்றம்
x
தினத்தந்தி 21 March 2019 11:00 PM GMT (Updated: 21 March 2019 8:25 PM GMT)

நாகர்கோவிலில் அரசியல் கட்சி கொடி கம்ப பீடங்கள் இடித்து அகற்றப்பட்டன.

நாகர்கோவில்,

நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து அரசியல் கட்சிகளின் கொடி கம்பங்களை அகற்றவோ அல்லது மறைக்கவோ வேண்டும் என்று கலெக்டர் பிரசாந்த் வடநேரே உத்தரவிட்டார். அதன்பேரில் கொடி கம்பங்களை அரசியல் கட்சியினர் மூடி வைத்தனர்.

இந்த நிலையில் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் அனுமதி இல்லாமல் பொது இடங்கள் மற்றும் சாலை ஓரங்களில் பொதுமக்களுக்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ள கொடி கம்பங்களை அகற்ற ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. மேலும் இந்த உத்தரவை உடனடியாக செயல்படுத்தி அதற்கான நிலவர அறிக்கையை வருகிற 25-ந் தேதிக்குள் ஐகோர்ட்டில் தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

எனவே குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சி, 3 நகராட்சிகள், 55 பேரூராட்சிகள், 95 கிராம ஊராட்சிகளில் தேர்தல் தொடர்பாக ஏற்கனவே மூடி வைக்கப்பட்டு உள்ள கொடி கம்பங்கள், கொடி கம்ப பீடங்கள் மற்றும் அனுமதியின்றி பொது இடங்களிலும், சாலை ஓரங்களிலும் வைக்கப்பட்டுள்ள அனைத்து கொடி கம்பங்கள் மற்றும் கொடி கம்ப பீடங்களை உடனடியாக அகற்றி 23-ந் தேதிக்குள் (அதாவது நாளை) அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறினார்.

அதன்படி குமரி மாவட்டம் முழுவதும் நேற்று கொடி கம்பங்கள் மற்றும் கொடி கம்ப பீடங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து அகற்றி வருகிறார்கள். நாகர்கோவிலை பொறுத்த வரையில் சவேரியார் ஆலய சந்திப்பு, கோட்டார், பீச்ரோடு, செட்டிகுளம், வடசேரி, ஒழுகினசேரி உள்பட பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டு இருந்த கொடி கம்பங்களை மாநகராட்சி நிர்வாகிகள் நேற்று அகற்றினர். கொடி கம்ப பீடங்களும் இடித்து அகற்றப்பட்டன.

Next Story