தூத்துக்குடியில் பிரசார பொதுக்கூட்டம் “துன்பப்படும் மக்களின் துயர் துடைக்க கனிமொழியை வெற்றிபெற செய்யுங்கள்” - வைகோ பேச்சு


தூத்துக்குடியில் பிரசார பொதுக்கூட்டம் “துன்பப்படும் மக்களின் துயர் துடைக்க கனிமொழியை வெற்றிபெற செய்யுங்கள்” - வைகோ பேச்சு
x
தினத்தந்தி 22 March 2019 11:30 PM GMT (Updated: 22 March 2019 10:58 PM GMT)

“துன்பப்படும் மக்களின் துயர் துடைக்க கனிமொழியை வெற்றி பெற செய்யுங்கள்” என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் வைகோ பேசினார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தி.மு.க. வேட்பாளராக கனிமொழி எம்.பி. போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம், தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே நேற்று இரவு நடந்தது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ம.தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் ரமேஷ் வரவேற்று பேசினார். வேட்பாளர் கனிமொழி எம்.பி. முன்னிலை வகித்தார். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழர் உரிமைக்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்த கலைஞரின் மகள், இன்றைய மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர். நாளைய தூத்துக்குடி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர். இவர் அன்பும், பரிவும், கனிவும், பாசமும், மனிதாபிமானமும் கொண்ட அணுகுமுறையால், சாதி, மதம், கட்சி கடந்து ஒடுக்கப்பட்டவர்களுக்காக, மீனவர்களுக்காக, விவசாயிகளுக்காக, வேலையில்லா திண்டாட்டத்தால் வாடி வதங்கும் இளைஞர்களுக்காக மாநிலங்களவையில் குரல் கொடுத்து உள்ளார்.

தூத்துக்குடி மாநகரில் கடந்த மே மாதம் 22-ந் தேதி நடந்த கொடுமை தமிழக வரலாற்றில் ஒரு கருப்பு நாள். துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். அவர்கள் வீடுகளுக்கு சென்றபோது நெஞ்சம் வெடித்து சிதறியது. இந்த மண்ணை பாதுகாக்க, சுற்றுச்சூழலை பாதுகாக்க 22 ஆண்டுகளாக போராடி வருகிறேன். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இனிமேல் யாரும் போராட வரக்கூடாது என்று திட்டமிட்டு படுகொலை நடத்தப்பட்டு உள்ளது. அது ஸ்டெர்லைட் ஆலைக்காக அ.தி.மு.க. அரசு நடத்திய படுகொலை. போலீசில் நல்லவர்களும், நேர்மையானவர்களும் உண்டு. அந்த போலீஸ் துறையை கூலிப்படையாக மாற்றி 13 பேர் கொலை செய்யப்பட்டனர். இதற்கு நீதி வேண்டும். நீதி கிடைக்கும். இந்த நீதியை மக்கள் மன்றம் முதலில் வழங்கட்டும். இந்த வாக்காளர்கள் வழங்கட்டும்.

மீனவர்களுக்கு எதிராக இலங்கையில் சட்ட திருத்தம் கொண்டு வந்தார்கள். இந்திய எல்லைக்குள் இருந்து மீனவர்களை பிடித்து சென்று ரூ.1½ கோடி அபராதம் விதித்து 6 மாதம் சிறையில் அடைப்பார்கள். இந்த சட்ட திருத்தம் மக்களை அழித்துவிடும் என்று கூறினோம். கேட்கவில்லை. தூத்துக்குடியில் சுற்றுச்சூழலை மாசுபடுத்திய வேதாந்தா நிறுவனத்துக்கு ஹைட்ரோ கார்பன் திட்டத்தில் உரிமம் வழங்கப்பட்டு உள்ளது. மேகதாது அணையை கட்டிக் கொள்ளுங்கள் என்று கர்நாடகாவிடம் மத்திய அரசு கூறி விட்டது. இதனால் தமிழகத்தில் 19 மாவட்டங்கள் அழிந்து போகும். முல்லைபெரியாறு அணையை இடித்து விட்டு வேறு அணை கட்டுவதற்கு கேரளாவுக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி கொடுத்து விட்டது.

பாசிசமா, ஜனநாயகமா என்பதற்காகத்தான் இந்த தேர்தல். ஜனநாயகம் வெற்றி பெற வேண்டும். 40 தொகுதிகளிலும் வெற்றியை தாருங்கள். அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் எங்கள் தங்கை கனிமொழி என்ற நிலையை உருவாக்க வேண்டும். கட்சி பார்க்காமல், சாதி பார்க்காமல், துன்பப்படும் மக்களின் துயர் துடைக்க, இந்த தொகுதிக்கு என்ன தேவை என்று திட்டமிட்டு செயலாற்றக்கூடிய கனிமொழியை வெற்றி பெறச் செய்யுங்கள். உங்கள் வாக்குகளை திரட்டுங்கள். சிந்தப்பட்ட ரத்தத்துக்காக, நீதிக்காக வாக்குகளை திரட்டுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி எம்.பி. பேசும்போது, “ஆண்டுதோறும் 21 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்கிறார்கள். ரூ.72 ஆயிரம் கோடி இருந்தால், விவசாயிகளின் கடனை ரத்து செய்ய முடியும். ஆனால் அதற்கு பா.ஜனதாவுக்கு மனம் வரவில்லை. வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் அவர்களுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும்” என்றார்.

கூட்டத்தில் தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ஜெகன், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், ம.தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் செல்வம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் அர்ச்சுணன், காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் மீராசா, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் அகமது இக்பால், சமத்துவ மக்கள் கழக மாவட்ட செயலாளர் அற்புதராஜ், திராவிடர் கழக மாவட்ட தவைர் பெரியாரடியான் மற்றும் கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, திருச்செந்தூர், காயல்பட்டினம், ஆறுமுகநேரி, ஆத்தூர், முக்காணி உள்ளிட்ட பகுதிகளில் வைகோ திறந்த வேனில் சென்று கனிமொழி எம்.பி.க்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், அவர்களின் உரிமைகளுக்காகவும், மாநிலங்களவையிலே குரல் கொடுத்த கனிமொழியின் குரல், மக்களவையிலும் ஒலிக்க வேண்டும். பாசிச பா.ஜனதா அரசும், எதிலும் ஊழல் செய்த அ.தி.மு.க. அரசும் இணைந்து, எல்லா துறைகளிலும் தமிழக மக்களை வஞ்சித்து விட்டது. நாட்டில் சமூக நீதி, இட ஒதுக்கீடு, ஜனநாயகம், மதசார்பற்ற தன்மை அழிக்கப்பட்டு குழி தோண்டி புதைக்கப்பட்டது. சரக்கு, சேவை வரி விதிப்பு, உயர் பணமதிப்பு இழப்பு போன்ற தவறான பொருளாதார கொள்கைகளால் சிறு குறு தொழில்கள் அழிந்தன. எனவே மத்தியில் மதசார்பற்ற அரசு அமைய, பாசிச ஆட்சி அகற்றப்பட தி.மு.க. வேட்பாளர் கனிமொழிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெறச் செய்யுங்கள் என்றார்.

அப்போது தி.மு.க. வேட்பாளர் கனிமொழி எம்.பி., தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Next Story