பறக்கும் படை சோதனையில் ரூ.43½ லட்சம் வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் பறிமுதல் வாலிபரிடம் விசாரணை


பறக்கும் படை சோதனையில் ரூ.43½ லட்சம் வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் பறிமுதல் வாலிபரிடம் விசாரணை
x
தினத்தந்தி 23 March 2019 11:15 PM GMT (Updated: 23 March 2019 6:45 PM GMT)

கோவையில் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூ.43½ லட்சம் வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கோவை,

நாடாளுமன்ற தேர்தலையொட்டி கோவை மாவட்டத்தில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை ஒண்டிப்புதூர் மேம்பாலம் பகுதியில்நேற்று காலை 10.30 மணியளவில் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி பறக்கும் படை அலுவலர்கள் சுதாகரன், தேவநாதன் மற்றும் ஊழியர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். அவரிடம் அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர், யூரோ கரன்சி நோட்டுகள் கட்டு கட்டாக இருந்தன. அமெரிக்க டாலர் 35,000 (ரூ.24 லட்சத்து 29 ஆயிரம்), சிங்கப்பூர் டாலர் 22,000 (ரூ.11 லட் சத்து 31 ஆயிரத்து 900) ஐரோப்பிய நாடுகளின் யூரோ கரன்சி 10,000 (ரூ.7 லட்சத்து 84 ஆயிரம்) மொத்தம் ரூ.43,44,900 இருந்தது.

இது தொடர்பாக மோட்டார் சைக்கிளில் வந்தவரிடம் அதிகாரிகள் விசாரித்தனர். இதில் அவர் பாம்பம்பட்டியை சேர்ந்த ஜெயராமன் (வயது 26) என்பது தெரியவந்தது. அவர், சிங்காநல்லூர் உப்பிலிபாளையத்தில் பண பரிமாற்ற நிறுவனம் நடத்தி வருவதாகவும், தங்களது தலைமை அலுவலகம் கொச்சி யில் அமைந்து உள்ளதாகவும் தெரிவித்தார்.

கோவையில் வசூலித்த வெளிநாட்டு கரன்சிகளை கொச்சிக்கு அனுப்ப கொண்டு செல்வதாக கூறி, சில ஆவணங்களை காண்பித்தார். அதை பார்த்த பறக்கும் படை அலுவலர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரிடம் இருந்த வெளிநாட்டு கரன்சி நோட்டுகளை அதிகாரிக் பறிமுதல் செய்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பிரபாகரனிடம் ஒப்படைத்தனர்.

மேலும் வெளிநாட்டு கரன்சிகள் கொண்டு வந்த வாலிபரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பிரபாகரன் கூறும் போது, ‘வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் தொடர்பாக அந்த வாலிபர் ஒரு சில ஆவணங்கள் வைத்துள்ளார். அதை ஆய்வு செய்து வருகிறோம். இது குறித்து வருமான வரித்துறைக்கும் தகவல் கொடுத்து உள்ளோம். அதன் பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்– அன்னூர் ரோட்டில் ஒரு தனியார் திருமண மண்டபம் அருகே நிலையான கண்காணிப்புக்குழு அதிகாரி ரவிச்சந்திரன் தலைமையில் போலீஸ் சப்– இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது காலை 9.45 மணிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த மேட்டுப்பாளையம் காட்டூரை சேர்ந்த தவுபிக்அலி (வயது 25) என்பவரை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர்.

இதில் அவரிடம் ரூ.2 லட்சத்து 42 ஆயிரம் இருப்பது தெரியவந்தது. அதற்கான ஆவணங்களை அதிகாரிகள் கேட்டனர். ஆனால் அதற்கு முறையான ஆவணங்கள் எதுவும் இல்லை என்பது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து நிலையான கண்காணிப்புக்குழுவினர் ரூ.2 லட்சத்து 42 ஆயிரத்தை பறிமுதல் செய்து மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் புனிதாவிடம் ஒப்படைத்தனர்.


Next Story