வெப்பத்தை தணிக்க மாயார் ஆற்றில் வளர்ப்பு யானைகள் ஆனந்த குளியல்
முதுமலையில் வெப்பத்தை தணிக்க மாயார் ஆற்றில் வளர்ப்பு யானைகள் ஆனந்த குளியல் போட்டன.
மசினகுடி,
மலைமாவட்டமான நீலகிரியில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை கோடை காலம் ஆகும். இந்த 3 மாதங்களில் வெயிலின் தாக்கம் இருக்கும். இருப்பினும் சமவெளி பகுதியை விட சற்று குறைவாக வெயில் காணபடும். ஆனால் இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதில் மசினகுடி மற்றும் அதனை ஒட்டி உள்ள முதுமலை புலிகள் காப்பக பகுதியில் பகல் நேரங்களில் அளவுக்கு அதிகமான வெப்பம் பதிவாகி வருகிறது. இதனால் மனிதர்கள் மட்டுமின்றி வனவிலங்குகளும் அவதிப்பட்டு வருகின்றன.
முதுமலை புலிகள் காப்பகத்தில் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. இங்குள்ள வளர்ப்பு யானைகளும் கடும் வெயிலினால் தவித்து வருகின்றன. இதனால் வளர்ப்பு யானைகள் அங்குள்ள மாயார் ஆற்றின் கரையில் உள்ள மரங்களில் கட்டி வைக்கப்படுகின்றன. மேலும் வளர்ப்பு யானைகளுக்கு தேவையான பசுந்தீவனங்களும் அதே இடத்துக்கு கொண்டு சென்று வழங்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
கடந்த பிப்ரவரி 23–ந் தேதி முதல் வளர்ப்பு யானைகளுக்கு புத்துணர்வு முகாம் நடைபெற்று வருகிறது. இதனால் அனைத்து யானைகளும் முழு ஓய்வில் உள்ளன. யானைகளுக்கு எந்த பணிகளும் வழங்கபடுவதில்லை. காலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பான மருத்துவ சிகிச்சைகள் மற்றும் ஊட்டச்சத்து மாத்திரைகள், லேகியங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் யானைகள் உடல் ஆரோக்கியத்துடன் உள்ளன.
இந்த நிலையில் வெப்பம் அதிகரிக்கும்போது, யானைகளை பாகன்கள் மாயார் ஆற்றில் குளிக்க வைக்கின்றனர். யானைகளும் வெப்பத்தை தணிக்க ஆற்றில் ஆனந்த குளியல் போடுகின்றன. துதிக்கையால் தண்ணீரை உடல் மீது ஊற்றியும், தண்ணீருக்குள் படுத்தும் உடல் வெப்பத்தை தணித்து கொள்கின்றன. இதனை சுற்றுலா பயணிகளும் ஆர்வத்துடன் கண்டு ரசித்து செல்கின்றனர்.