கணினி மூலம் குலுக்கல் முறையில் வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு


கணினி மூலம் குலுக்கல் முறையில் வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு
x
தினத்தந்தி 24 March 2019 4:30 AM IST (Updated: 24 March 2019 1:53 AM IST)
t-max-icont-min-icon

கணினி மூலம் குலுக்கல் முறையில் வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை ஒதுக்கீடு செய்யும் பணி நடந்தது.

கரூர்,

நாடாளுமன்ற தொகுதியில் ஏப்ரல் மாதம் 18-ந்தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இதையொட்டி மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பல்வேறு கட்ட சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளன. இந்தநிலையில் கணினி மூலம் குலுக்கல் முறையில் அதனை ஒதுக்கீடு செய்யும் பணி அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான அன்பழகன் முன்னிலையில் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. அப்போது மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) செல்வசுரபி, தேர்தல் பிரிவு வட்டாட்சியர் சிவக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

கரூர் நாடாளுமன்ற தொகுதியில் 1,037 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களுக்கும், வாக்குப்பதிவிற்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் வாக்குப்பதிவு எந்திரங்கள் கணினிமுறையில் குலுக்கல் செய்யப்பட்டு அதனடிப்படையில் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அந்த வகையில் கரூர் மாவட்டத்திற்கு என்று 2,744 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், 1,552 கட்டுப்பாட்டுக் கருவிகளும், 1,772 வாக்காளர் வாக்குப்பதிவு தணிக்கை எந்திரங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தேவைப்படுகின்ற எண்ணிக்கையை விட 20 சதவீத வாக்குப்பதிவு எந்திரங்களும், 30 சதவீத வாக்குப்பதிவு தணிக்கை எந்திரங்களும் கூடுதலாக வைத்திருக்க வேண்டும் என்று இந்தியத்தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

ஏதேனும் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்படும் பட்சத்தில் இந்த கூடுதல் எந்திரங்கள் பயன்படுத்தப்படும். கரூர் மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு கூடுதலாக 209 எந்திரங்கள் என ஆக மொத்தம் 1,246 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கப்படும். இதே போல் 209 மின்னணு கட்டுப்பாட்டு கருவிகள் கூடுதலாக ஒதுக்கப்படும். இன்று (நேற்று) கணினி முறை குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டுக்கருவிகள் மற்றும் வாக்குப்பதிவு தணிக்கை எந்திரங்கள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு உரிய நாளில் அனுப்பிவைக்கப்படும் என தேர்தல் அதிகாரி அன்பழகன் தெரிவித்தார். 

Next Story