ஊழல் பற்றி கூறும் மு.க. ஸ்டாலின் என்னுடன் மேடையில் விவாதிக்க தயாரா? முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி
ஊழல் நிறைந்த ஆட்சி நடைபெறுவதாக கூறும் ஸ்டாலின் என்னுடன் ஒரே மேடையில் விவாதிக்க தயாரா? என்று முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை காந்திசிலை அருகில் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து பிரசார பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல் - அமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி கலந்துகொண்டு பேசியதாவது:-
நாடாளுமன்றத்தில் திறமையானவரை பிரதமராக ஆக்க வேண்டும் என்பதற்காக இந்த தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில் வலிமையான கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. மோடியை மீண்டும் பிரதமராக்க அனைவரும் பாடுபட வேண்டும்.
ஸ்டாலின், அ.தி.மு.க.வை விமர்சனம் செய்து வருகிறார். மேலும் நமது கூட்டணியில் உள்ள பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாசையும் விமர்சனம் செய்து வருகிறார். அவரை கொள்கை இல்லாதவர் என்று கூறுகிறார். பா.ம.க.வினர் கொள்கையுடன் செயல்படுபவர்கள். யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பது அவர்களது முடிவு. இந்த தேர்தலில் தி.மு.க.வை படுதோல்வி அடைய செய்வோம்.
2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை கணக்கிட்டு பார்க்கும் போது அ.தி.மு.க. தலைமையில் அமைந்துள்ள இந்த கூட்டணி 40-க்கு 40 கண்டிப்பாக வெற்றி பெறும்.
தி.மு.க.வினர், எங்கள் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறுகின்றனர். அழகு நிலையத்திலும், பிரியாணி கடையிலும், செல்போன் கடையிலும் பெண்களை தாக்கியவர்கள் யார் என்று எல்லாம் உங்களுக்கு தெரியும்.
கோடநாடு கொலை வழக்கில் என் மீது பொய் குற்றச்சாட்டுகள் தி.மு.க.வினர் கூறினர். இதுகுறித்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளேன். பொய் குற்றச்சாட்டுகள் கூறியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
திருவண்ணாமலையில் காலி இடம் இருந்தால் போதும் தி.மு.க.வினர் உடனே பட்டா போடுவதாக மறைந்த முதல் -அமைச்சர் ஜெயலலிதாவிடம் புகார் சென்றது. உடனே ஜெயலலிதா நில அபகரிப்பு பிரிவு ஒன்றை தொடங்கி நிலங்களை அபகரித்தவர்களிடம் இருந்து அதனை மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீது உள்ள வழக்கில் அவரை நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கி உள்ளது. இதனால எங்களை பற்றி பேச தி.மு.க.வினருக்கு என்ன தகுதி உள்ளது.
ஊழல் நிறைந்த ஆட்சி நடைபெறுவதாக ஸ்டாலின் கூறி வருகிறார். இதுபற்றி நான் நேருக்கு நேர் பேச தயார், அவர் என்னிடம் மேடையில் விவாதித்து பதில் அளிக்க முடியுமா?. நேர்மையான ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி தி.மு.க.
கடந்த 2 ஆண்டுகளில் அதிக போராட்டம் நடந்த மாநிலம் தமிழகம் தான். ஒரு பிரச்சினையை சமாதானம் செய்து வைத்தால் இன்னொரு பிரச்சினையை அவர்கள் தூண்டி விடுகின்றனர். ஏழை மக்களுக்கு ரூ.2 ஆயிரம் அ.தி.மு.க. அரசு வழங்கியது. தேர்தலை காரணம் காட்டி அதை தடுத்தி நிறுத்தியவர்கள் தி.மு.க.வினர். தேர்தலுக்கு பிறகு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். இந்த தேர்தலில் தி.மு.க.விற்கு மக்கள் மரண அடி கொடுக்க வேண்டும்.
இவ்வாறு முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
கூட்டத்தில் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், எம்.எல்.ஏ.க்கள் தூசி கே.மோகன், பன்னீர்செல்வம், எம்.பி.க்கள் வனரோஜா, ஏழுமலை, முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன், முன்னாள் மத்திய மந்திரி செஞ்சி ராமச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. அரங்கநாதன், பா.ம.க. தேர்தல் பிரசார அணி செயலாளர் எதிரொலிமணியன், மாநில துணை பொது செயலாளர் ரா.காளிதாஸ், மாவட்ட செயலாளர்கள் ஜானகிராமன், பிரசாத், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் வி.எம்.நேரு, பா.ஜ.க. மாவட்ட தலைவர் நேரு, த.மா.கா. மாவட்ட தலைவர் மணிவர்மா, அ.தி.மு.க. மாவட்ட துணை செயலாளர்கள் அமுதா அருணாசலம், மாவட்ட மாணவர் அணி செயலாளர் பிரங்கி வெங்கடேசன், இலக்கிய அணி செயலாளர் நாராயணன், நகர செயலாளர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story