மண்ணச்சநல்லூர் அருகே ஆழ்குழாய் கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்


மண்ணச்சநல்லூர் அருகே ஆழ்குழாய் கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
x
தினத்தந்தி 26 April 2019 4:15 AM IST (Updated: 26 April 2019 2:21 AM IST)
t-max-icont-min-icon

மண்ணச்சநல்லூர் அருகே நங்கமங்கலம் சத்திரத்தில் ஆழ்குழாய் கிணறு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சமயபுரம்,

மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது கல்பாளையம் ஊராட்சி. இப்பகுதியில் வறட்சியின் காரணமாக குடிநீர் பஞ்சம் நிலவி வருகிறது. இதைத்தொடர்ந்து குடிநீர் பஞ்சத்தை போக்குவதற்காக மண்ணச்சநல்லூர் சமயபுரம் செல்லும் சாலையில் வெங்கங்குடி ஊராட்சிக்குட்பட்ட நங்கமங்கலம் சத்திரம் என்ற இடத்தில் ஆழ்குழாய் கிணறு அமைத்து அப்பகுதிக்கு குடிநீர் செல்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

இந்நிலையில் நங்கமங்கலம்சத்திரத்தை சேர்ந்த பொதுமக்கள் இங்கு ஆழ்குழாய் அமைத்து வேறொரு ஊராட்சிக்கு குடிநீர் எடுத்துச்சென்றால் எங்கள் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்ப்பு தெரிவித்து ஆழ்குழாய் கிணறு அமைப்பதை தடுத்துநிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

இதுபற்றிய தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் வட்டார வளர்்ச்சி அலுவலர்கள் ராஜேந்திரன், சரவணக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது, அனைவருக்கும் குடிநீர் வசதி செய்து கொடுப்பது எங்கள் கடமை, இங்கு ஆழ்குழாய் கிணறு அமைப்பதால் இந்த பகுதிக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்துசென்றனர். இதைத் தொடர்ந்து ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றது. 

Next Story