கோவையில் ரூ.2 கோடி நகைகள் கொள்ளை வழக்கில் நிதிநிறுவன பெண் ஊழியர்- கள்ளக்காதலன் கைது


கோவையில் ரூ.2 கோடி நகைகள் கொள்ளை வழக்கில் நிதிநிறுவன பெண் ஊழியர்- கள்ளக்காதலன் கைது
x
தினத்தந்தி 30 April 2019 11:45 PM GMT (Updated: 30 April 2019 10:24 PM GMT)

கோவையில் ரூ.2 கோடி நகைகள் கொள்ளை வழக்கில் நிதிநிறுவன பெண் ஊழியர் மற்றும் அவருடைய கள்ளக்காதலன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் செல்போன்தான் குற்றவாளிகளை பிடிக்க முக்கிய ஆதாரமாக இருந்தது.

கோவை,

கோவை ராமநாதபுரம் சிக்னல் அருகே உள்ள கட்டிடத்தின் முதலாவது மாடியில் முத்தூட் மினி என்ற நிதிநிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு அடகு வைக்கும் தங்க நகைகளுக்கு வட்டிக்கு பணம் கொடுக்கப்பட்டு வருகிறது. இங்கு கடந்த 27-ந் தேதி கெம்பட்டி காலனியை சேர்ந்த திவ்யா (வயது 24), போத்தனூரை சேர்ந்த ரேணுகாதேவி (26) ஆகிய 2 பெண் ஊழியர்கள் பணியில் இருந்தனர்.

பிற்பகல் 3 மணியளவில் அங்கு முகமூடி அணிந்தபடி வந்த மர்ம ஆசாமி, அந்த பெண் ஊழியர்களை தாக்கியதுடன், அவர்களிடம் இருந்து லாக்கர் சாவியை வாங்கி, அதை திறந்து அதற்குள் இருந்த 803 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்து 480 ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றார். அதன் மதிப்பு ரூ.2 கோடி ஆகும்.

பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர சம்பவம் குறித்து தகவல் அறிந்த ராமநாதபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, முகமூடி அணிந்து வந்த நபரின் முகம் பதிவாகி இருந்தது. இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் சரண் உத்தரவின்பேரில் குற்றப்பிரிவு துணை கமிஷனர் பெருமாள் மேற்பார்வையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினார்கள்.

கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது, மர்ம ஆசாமி நிதிநிறுவனத்துக்குள் நுழையும் காட்சி இருந்தது. ஆனால் அங்கிருந்த பெண் ஊழியர்களை தாக்கும் காட்சி அதில் பதிவாகவில்லை. அத்துடன் அங்கு இருந்த லாக்கரை அனுபவம் வாய்ந்தவர்களால் மட்டுமே திறக்க முடியும். சாதாரண நபர்களால் திறக்க முடியாது.

மேலும் அங்கு இருக்கும் நகைகள் குறித்து வெளி நபர்களுக்கு தெரிய வாய்ப்பு இல்லை என்பதால், போலீசாருக்கு அந்த 2 பெண் ஊழியர் கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. எனவே அவர்கள் 2 பேரையும் தனித்தனியாக விசாரணை நடத்தினார்கள். இதில் திவ்யா கூறியதற்கும், ரேணுகாதேவி கூறிய பதிலுக்கும் முரண்பாடு இருந்தது. அத்துடன் அந்த மர்ம ஆசாமி இந்தியில்தான் அதிகளவில் பேசினார் என்றும், தமிழில் ஓரிரு வார்த்தைகள்தான் பேசினார் என்றும் ரேணுகாதேவி போலீசிடம் தெரிவித்தார்.

ஆனால் ராமநாதபுரத்தில் இருந்து போத்தனூர் ரெயில் நிலையத்துக்கு அந்த ஆசாமியை ஏற்றிச்சென்ற ஆட்டோ டிரைவரிடம் போலீசார் விசாரித்ததில் அந்த ஆசாமி, இந்தியில் பேசவில்லை, தமிழில் தெளிவாக பேசினார் என்று கூறினார். ரேணுகாதேவி முன்னுக்கு பின் முரணான பதிலை தெரிவித்ததால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது.

முதலில் அவர் ராமநாதபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து டிஸ்சார்ஜ் ஆன அவர் உடனே மற்றொரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்ந்தார். ஆனால் அவருக்கு முகத்தில் காயங்கள் எதுவும் இல்லை. இதையடுத்து போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அத்துடன் அவர் கடந்த 10 நாட்களாக யாரிடம் அதிகமாக செல்போன் மூலம் பேசி உள்ளார் என்பது குறித்த பட்டியலையும் போலீசார் தயார் செய்தனர்.

அதில் அவர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்த சுரேஷ் (30) என்பவருடன் அடிக்கடி பேசியதையும், அவர் ரேணுகாதேவியின் கள்ளக்காதலன் என்பதையும் கண்டுபிடித்தனர்.

சம்பவம் நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பும், சம்பவம் நடந்த பின்னர் 15 நிமிடங்கள் கழித்து ரேணுகாதேவி சுரேசிடம் 20 நிமிடங்கள் பேசியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை செய்தபோது சுரேசுடன் சேர்ந்து இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியதை கண்டுபிடித்தனர்.

உடனே போலீசார் ரேணுகாதேவியை சுரேசின் செல்போனுக்கு தொடர்பு கொள்ள வைத்து பேச வைத்தனர். அவர் பேசியதில் கேரள மாநிலம் பாலக்காட்டில் தலைமறைவாக இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் ரேணுகாதேவியை கைது செய்ததுடன், பாலக்காட்டுக்கு விரைந்து சென்று சுரேசையும் கைது செய்து கோவைக்கு அழைத்து வந்தனர்.

சுரேசின் தந்தை நகைப்பட்டறை நடத்தி வருவதால், அவர் கொள்ளையடித்த நகைகள் அனைத்தையும் பட்டறைக்கு கொண்டு சென்று அதை உருக்கி தங்க கட்டியாக மாற்றி வைத்து இருந்தது தெரியவந்தது. உடனே போலீசார் அவரிடம் இருந்து 803 பவுன் தங்க கட்டிகளையும் பறிமுதல் செய்தனர். அத்துடன் கொள்ளையடித்த ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்து 480-ம் பறிமுதல் செய்யப்பட்டது.

கோவையில் உள்ள தனியார் நிதிநிறுவனத்தில் ரூ.2 கோடி நகைகளை கொள்ளையடித்துச்சென்ற வழக்கில் செல்போன் அழைப்புகள் மூலம் துப்பு துலக்கி குற்றவாளிகளை உடனடியாக பிடித்த தனிப்படைகளை சேர்ந்த போலீசாரை கமிஷனர் சுமித் சரண் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் பாராட்டினார்கள்.

Next Story