ஆரோவில் அருகே பயங்கரம்; உடல் கருகிய நிலையில் இளம் பெண் பிணம், கற்பழித்து கொலையா? போலீசார் விசாரணை


ஆரோவில் அருகே பயங்கரம்; உடல் கருகிய நிலையில் இளம் பெண் பிணம், கற்பழித்து கொலையா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 30 April 2019 11:30 PM GMT (Updated: 2019-05-01T05:00:12+05:30)

ஆரோவில் அருகே சாலை ஓரத்தில் இளம்பெண் உடல் கருகிய நிலையில் கிடந்தது. அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

வானூர்,

புதுவையை யொட்டி உள்ள விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே குயிலாப்பாளையம்-பொம்மையார்பாளையம் மெயின்ரோட்டில் ஒரு முந்திரி தோப்பு அருகே இளம் பெண்ணின் உடல் கருகிய நிலையில் கிடந்தது. இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இதுபற்றி அவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் கோட்டக்குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு அஜய் தங்கம், ஆரோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் துர்கா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அங்கு கிடந்த பெண்ணின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள்.

மேலும் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரும் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணையை முடுக்கி விட்டார்.

தீவைத்து எரிக்கப்பட்ட நிலையில் கிடந்த இளம் பெண்ணுக்கு சுமார் 20 வயது இருக்கும். அவரை கொலை செய்து உடலை தீவைத்து எரித்துள்ளதாக தெரிகிறது. அடையாளம் தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அவரது முகம் முழுவதுமாக எரிக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் பெண்ணின் உடலை தவிர கைப் பை, செருப்பு உள்ளிட்ட எந்த பொருட்களும் காணவில்லை. ஆனால் ஆணுறை ஒன்றும், 3 பீர் பாட்டில்களும் அந்த பெண்ணின் உடல் அருகே கிடந்தன.

எனவே வேறு எங்காவது கொலை செய்து இங்கு கொண்டு வந்து போட்டு உடல் தீவைத்து எரிக்கப்பட்டதா? அந்த இளம் பெண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து உடனடியாக தெரியவில்லை. தொடர்ந்து அவரை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

விழுப்புரம் தடயவியல் துறையில் இருந்து போலீஸ் துப்பறியும் மோப்ப நாய் பிரிஸ்டி வரவழைக்கப்பட்டது. அது இளம் பெண்ணின் உடல் கிடந்த இடத்தில் இருந்து குயிலாப்பாளையம்-பொம்மையார்பாளையம் மெயின் ரோடு வழியாக கடற்கரை சாலை வரை சென்று அங்கு படுத்துக் கொண்டது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

அந்த இளம் பெண்ணின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி கனகசெட்டிகுளத்தில் உள்ள பிம்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார்அனுப்பி வைத்தனர். இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பெண் யார்? அவரை கொலை செய்து உடலை தீவைத்து எரித்தவர்கள் யார்? கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா? காதல் விவகாரத்தில் இந்த சம்பவம் நடந்ததா? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறார்கள்.

அரைகுறையாக எரிக்கப்பட்ட நிலையில் சாலை ஓரத்தில் இளம்பெண்ணின் உடல் கிடந்த சம்பவம் ஆரோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story