ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு எரிவாயு குழாய் பதிப்பதற்கு நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை; மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு எரிவாயு குழாய் பதிப்பதற்கு நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை; மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 15 May 2019 10:50 PM GMT (Updated: 15 May 2019 10:50 PM GMT)

ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு எரிவாயு குழாய் பதிப்பதற்காக நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

தூத்துக்குடியை சேர்ந்த கே.செல்லம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த வழக்கில் கூறியிருந்ததாவது:–

தூத்துக்குடி தெற்கு வீரபாண்டியபுரம் கிராமத்தில் சிப்காட் அமைப்பதற்காக ஏற்கனவே விவசாய நிலங்கள் அரசால் கையகப்படுத்தப்பட்டன. இதுதவிர காற்றாலை அமைக்கவும், ரெயில் பாதை அமைக்கவும் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இந்தியன் ஆயில் கழக அதிகாரிகள் கடந்த 6–ந்தேதி தெற்கு வீரபாண்டியபுரம் கிராமத்திற்கு வந்து விவசாயிகளிடம் ஆவணங்களில் கையெழுத்து பெற்றதோடு இழப்பீடு பெற்றுக்கொள்ளுமாறும் வலியுறுத்தினர். இதுதொடர்பாக அதிகாரிகளிடம் விசாரித்தபோது, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கும், இந்தியன் ஆயில் கழக வாடிக்கையாளர்களுக்கும் எரிவாயு வினியோகம் செய்வதற்காக பூமிக்கு அடியில் இயற்கை எரிவாயு குழாய்கள் பதிக்க இருப்பதாகவும், அதற்காக நிலத்தை கையகப்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தனர்.

ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு குழாய் மூலம் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வினியோகம் செய்ய ரூ.700 கோடி மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஆறு, கால்வாய், சாலை, வனம், பாதுகாக்கப்பட்ட சுற்றுச்சூழல் பகுதிகள், சக்கரைக்கோட்டை பறவைகள் சரணாலயம் உள்ளிட்ட பகுதிகளில் இந்த குழாய் பதிக்கப்பட உள்ளது. சென்னை எண்ணூர், திருவள்ளூர், பெங்களூரு, புதுச்சேரி, நாகை, மதுரை, தூத்துக்குடி ஆகிய வழித்தடத்திலேயே குழாய்கள் மூலம் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வினியோகம் செய்ய, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்கு முறை வாரியத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. ராமநாதபுரம் முதல் தூத்துக்குடி வரையிலான பகுதி இந்த பட்டியலில் இடம் பெறவில்லை.

இந்த நிலையில் முறையான அனுமதி பெறாமல் ஒரு சில தனியார் நிறுவனங்களுக்கு எரிவாயு வினியோகம் செய்யும் நோக்கில் இந்தியன் ஆயில் கழகம் இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதற்கு முறையான சுற்றுச்சூழல் அனுமதியும் பெறப்படவில்லை.

எனவே ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு எரிவாயு வழங்குவதற்கு குழாய் அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்துவது தொடர்பாக கடந்த 5.10.2018 மற்றும் 19.2.2019 ஆகிய தேதிகளில் மத்திய அரசால் பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நிஷாபானு, தண்டபாணி அமர்வு, ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு எரிவாயு குழாய் பதிக்க நிலம் கையகப்படுத்தும் மத்திய அரசின் அறிவிப்பாணைக்கு இடைக்கால தடை விதித்தது. மேலும் இதுதொடர்பாக பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை செயலாளர், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்கு முறை வாரிய செயலாளர் ஆகியோர் பதில் அளிக்கவும் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.


Next Story