14 பேர் பலியான கேளிக்கை விடுதி தீ விபத்து: மும்பை மாநகராட்சி அதிகாரிகள் 3 பேரை பணி நீக்கம் செய்ய முடிவு


14 பேர் பலியான கேளிக்கை விடுதி தீ விபத்து: மும்பை மாநகராட்சி அதிகாரிகள் 3 பேரை பணி நீக்கம் செய்ய முடிவு
x
தினத்தந்தி 18 May 2019 5:00 AM IST (Updated: 18 May 2019 3:41 AM IST)
t-max-icont-min-icon

14 பேரை பலி கொண்ட கமலா மில் வளாக கேளிக்கை விடுதி தீ விபத்தில் மாநகராட்சி அதிகாரிகள் 3 பேரை பணி நீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் 9 அதிகாரிகள் மீது நடவடிக்கை பாய்கிறது.

மும்பை,

மும்பை லோயர்பரேல் கமலா மில் வளாகத்தில் உள்ள 4 மாடி கட்டிடத்தின் மொட்டை மாடியில் செயல்பட்டு வந்த ‘ஒன் அபோவ்’ மற்றும் ‘மோஜோ பிரிஸ்டோ’ ஆகிய 2 கேளிக்கை விடுதிகளில் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இதில், அங்கு பிறந்தநாள் கொண்டாடிய இளம்பெண் உள்பட 14 பேர் உயிரிழந்தனர். இந்த தீ விபத்து தொடர்பாக ‘ஒன் அபோவ்’ மற்றும் ‘மோஜோ பிரிஸ்டோ’ கேளிக்கை விடுதி உரிமையாளர்கள் உள்பட 12 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த தீ விபத்து தொடர்பாக மும்பை மாநகராட்சி அதிகாரிகள் செய்த தவறுகள் குறித்தும் துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது.

இதில் ‘ஜி தெற்கு' வார்டு உதவி கமிஷனர்களான பிரசாந்த் சப்கலே, பாக்கியஸ்ரீ கப்சே, மருத்துவ அதிகாரி சதீஷ் பட்கிரே உள்பட 12 பேர் குற்றவாளிகள் என கண்டறியப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக அறிக்கை கடந்த சில தினங்களுக்கு முன் அப்போதைய மாநகராட்சி கமிஷனராக இருந்த அஜாய் மேத்தாவிடம் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த அறிக்கையில், மாநகராட்சி அதிகாரிகள் 3 பேரை பணி நீக்கம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.

மற்ற 9 அதிகாரிகள் மீதும் நடவடிக்கை பாய்கிறது. அதன்படி சிலருக்கு பதவி குறைப்பு, சம்பள குறைப்பு செய்யவும் மற்றும் சிலர் மீது துறைரீதியான நடவடிக்கைகக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.

இதன்படி மூன்று அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்படுவது உறுதியாகி உள்ளதாக மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான அறிவிப்பு நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வருகிற 23-ந் தேதிக்கு பின்னர் அறிவிக்கப்படும் என மாநகராட்சி மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story