தூத்துக்குடியில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அறைக்கு 3 அடுக்கு பாதுகாப்பு - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்


தூத்துக்குடியில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அறைக்கு 3 அடுக்கு பாதுகாப்பு - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
x
தினத்தந்தி 20 May 2019 11:30 PM GMT (Updated: 20 May 2019 8:05 PM GMT)

தூத்துக்குடியில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக் கப்பட்டு உள்ள அறைக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நேற்று முன்தினம் அமைதியாக நடந்தது. ஓட்டுப்பதிவு முடிந்த பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் ‘சீல்‘ வைக்கப்பட்டது.

தொடர்ந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்குச்சாவடியில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தூத்துக்குடி அண்ணா பல்கலைக்கழக வ.உ.சி. என்ஜினீயரிங் கல்லூரியில் அமைக்கப்பட்டு உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு கொண்டு வரப்பட்டது.

இதைத்தொடர்ந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் அதனுடன் இணைத்து அனுப்பப்பட்ட ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், ஒப்புகை சீட்டு காண்பிக்கும் கருவி ஆகியவை பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டது.

வாக்குச்சாவடியில் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டிருந்தாலோ, வழக்கத்தைவிட 15 சதவீதத்துக்கு குறைவாகவோ அல்லது அதிகமாகவோ வாக்கு பதிவாகி இருந்தால் அதனை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் விதிமுறை ஆகும்.

அதன்படி வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் நேற்று காலையில் ஆய்வு நடந்தது. இந்த பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பொது பார்வையாளர் சுரேஷ்குமார் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சுகுமார் மற்றும் வேட்பாளர்களின் பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.

தொடர்ந்து மாவட்ட தேர்தல் அலுவலர், தேர்தல் பார்வையாளர் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட பாதுகாப்பு அறை மூடி ‘சீல்‘ வைக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான சந்தீப்நந்தூரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் சிறப்பாக நடந்து முடிந்தது. ஓட்டுப்பதிவு முடிந்த பின்னர் அந்தந்த மண்டல அலுவலர்கள் மூலம் வாக்குப்பதிவு எந்திரங்கள் தூத்துக்குடி அண்ணா பல்கலைக்கழக வ.உ.சி. என்ஜினீயரிங் கல்லூரியில் அமைக்கப்பட்டு உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு கொண்டு வரப்பட்டது. மொத்தம் 72.61 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ள அறைக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. 24 மணி நேரமும் கேமரா மூலம் கண்காணிக்கப்பட உள்ளது. அனைத்து ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்டு உள்ளன.

அடுத்த கட்டமாக வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகளை தொடங்க உள்ளோம். தேர்தல் ஆணையம் சார்பில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கு நாளை (அதாவது இன்று) பயிற்சி வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்குகள் எண்ணப்படும். அதற்காக 14 மேஜைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அதே நேரத்தில் தபால் ஓட்டுகள் மற்றொரு அறையில் எண்ணப்படும். நாடாளுமன்ற தேர்தலில் பதிவான தபால் வாக்குகள் தேர்தல் அலுவலர் முன்னிலையில் எண்ணப்படும்.

வேட்பாளர்கள் ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு முகவர்களை நியமிக்கலாம். காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணி தொடங்கும். மின்னணு வாக்குப்பதிவுகள் எண்ணப்பட்ட பின்னர், ஒப்புகை சீட்டு எந்திரத்தில் பதிவான வாக்குகளுடன் ஒப்பிட்டு பார்க்கப்படும். அதன் பின்னர் இறுதியில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story