28 ஆண்டுகளுக்கு பிறகு கன்னியாகுமரி தொகுதியை கைப்பற்றியது காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம்


28 ஆண்டுகளுக்கு பிறகு கன்னியாகுமரி தொகுதியை கைப்பற்றியது காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம்
x
தினத்தந்தி 23 May 2019 11:00 PM GMT (Updated: 23 May 2019 8:35 PM GMT)

கன்னியாகுமரி தொகுதியை காங்கிரஸ் கட்சி 28 ஆண்டுகளுக்கு பிறகு கைப்பற்றியது. இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

நாகர்கோவில்,

தொகுதி மறுசீரமைப்பினால் நாகர்கோவில் நாடாளுமன்ற தொகுதி கடந்த 2009-ம் ஆண்டுக்கு பிறகு கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியாக உருவானது. இந்த தொகுதிகளில் மார்ஷல் நேசமணி, பெருந்தலைவர் காமராஜர், குமரி அனந்தன் போன்ற முக்கிய தலைவர்கள் வெற்றி பெற்று எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த தொகுதி காங்கிரஸின் கோட்டையாக இருந்தது.

கடந்த 1991-ம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் இந்த தொகுதியில் டென்னிஸ் போட்டியிட்டு வென்றார். அதன் பிறகு காங்கிரஸ் கட்சியால் அங்கு வெற்றி பெற முடியவில்லை. இடையில் கூட்டணி கட்சியினரும், மற்ற கட்சியினரும் வெற்றி பெற்றனர். 1999-ம் ஆண்டு இங்கு முதன்முறையாக பா.ஜனதா வெற்றி பெற்றது. அதாவது அந்த கட்சியின் சார்பில் போட்டியிட்ட பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய மந்திரியானார்.

28 ஆண்டுகளுக்கு பிறகு...

2004-ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பெல்லார்மினும், 2009-ம் ஆண்டு தி.மு.க.வின் ஹெலன் டேவிட்சனும் வெற்றி பெற்றனர். கடந்த தேர்தலில் பொன்.ராதாகிருஷ்ணன் மீண்டும் வெற்றியை ருசித்தார். அப்போது அவரை எதிர்த்து போட்டியிட்ட எச்.வசந்தகுமார் தோல்வி அடைந்தார்.

இந்த நிலையில் தற்போது நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எச்.வசந்தகுமார் வெற்றி பெற்று இருக்கிறார். இதன் மூலம் கன்னியாகுமரி தொகுதியை 28 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் கட்சி மீண்டும் கைப்பற்றி உள்ளது. இந்த வெற்றி காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி முகம் தெரிந்தவுடன் குமரி மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்த தொண்டர்கள் ஒருவருக்கொருவர் கைகுலுக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Next Story