கோடை விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்
கோடை விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் காவிரி ஆற்றில் குளித்தும் பரிசலில் சென்றும் மகிழ்ந்தனர்.
பென்னாகரம்,
சுற்றுலா தலமான ஒகேனக்கல்லுக்கு கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். அவர்கள் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்வார்கள். கோடை விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில் கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது. அதன்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 800 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்தை காவிரி நுழைவிடமான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளந்து கண்காணித்து வருகின்றனர்.
இந்தநிலையில் கோடை விடுமுறை முடிய இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் நேற்று 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர். அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயின் அருவி, சினிபால்ஸ் மற்றும் காவிரி ஆற்றில் குளித்தனர். அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. பின்னர் அவர்கள் குடும்பத்தினர், நண்பர்களுடன் பரிசல் துறையில் இருந்து பாதுகாப்பு உடை அணிந்து கோத்திக்கல், பெரியபாணி வழியாக கூட்டாறு மணல் திட்டு வரை சென்றனர்.
பின்னர் சுற்றுலா பயணிகள் மீன் அருங்காட்சியகம், முதலை பண்ணை, சிறுவர் பூங்கா, தொங்கு பாலம் உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பா£த்தனர். ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே காணப்பட்டது. சுற்றுலா பயணிகள் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் வந்ததால் பஸ் நிலையம், அஞ்செட்டி சாலை, தர்மபுரி சாலை உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள் இருபுறமும் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனால் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் கடைகள், ஓட்டல்களில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. கூட்டம் அதிக அளவில் இருந்ததால் போலீசார், ஊர்க்காவல் படையினர் ஆலாம்பாடி, மணல் திட்டு, மெயின் அருவி, நடைபாதை, பரிசல்துறை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ரோந்து சென்று கண்காணித்தனர்.