மதுரை எஸ்.ஆலங்குளம், ஆனையூர் பகுதிகளில் 5 நாட்களாக இரவில் மின் தடை; பொதுமக்கள் கடும் அவதி


மதுரை எஸ்.ஆலங்குளம், ஆனையூர் பகுதிகளில் 5 நாட்களாக இரவில் மின் தடை; பொதுமக்கள் கடும் அவதி
x
தினத்தந்தி 27 May 2019 4:33 AM IST (Updated: 27 May 2019 4:33 AM IST)
t-max-icont-min-icon

மதுரை எஸ்.ஆலங்குளம், ஆனையூர் பகுதிகளில் தொடர்ந்து 5 நாட்களாக இரவு முழுவதும் மின் தடை ஏற்படுவதால் அப்பகுதி பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.

மதுரை,

மதுரை மகாத்மா காந்தி நகரில் துணை மின் நிலையம் உள்ளது. இங்கிருந்து எஸ்.ஆலங்குளம், இமயம்நகர், முடக்காத்தான், ஆனையூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த 5 நாட்களாக இரவு 8 மணி முதல் நள்ளிரவு வரை இந்த பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். ஆனாலும் ஒவ்வொரு நாளும் இரவு நேரத்தில் பல மணி நேர மின்வெட்டு தொடர்ந்து இருந்து வருகிறது.

இதனால் ஆத்திரமடைந்த மக்கள், நேற்று முன்தினம் இரவில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த கூடல்புதூர் போலீசார் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், எதிர்பாராத விதமாக மகாத்மா காந்திநகர் துணை மின் நிலைய எந்திரங்களில் திடீர் பழுது ஏற்பட்டுள்ளது. உடனடியாக சரி செய்யப்படும் என்று கூறியுள்ளனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலைகைவிட்ட னர்.

ஆனால் நேற்று இரவும் சரியாக 7.30 மணியளவில் எஸ்.ஆலங்குளம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது. இதுபற்றி அந்த பகுதியினர் கூறுகையில், “எஸ்.ஆலங்குளம், ஆனையூர், இமயம்நகர், எஸ்.வி.பி.நகர், அன்புநகர், ஆனந்த நகர், கோசாகுளம், பனங்காடி, முடக்காத்தான், மீனாம்பாள்புரம் ஆகிய பகுதிகளில் கடந்த 5 நாட்களாக இரவு நேரத்தில் மட்டும் மின்தடை செய்யப்படுகிறது. ஆனால் அதிகாரிகள் மழுப்பலாக பதில் அளிக்கிறார்கள். குழந்தைகள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும் மின்தடையால் கடும் அவதிப்பட்டு வருகிறோம். இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். நாளை (அதாவது இன்று) காலையில் மீண்டும் நாங்கள் சாலை மறியலில் ஈடுபட உள்ளோம்“ என்றனர்.

Next Story