விவசாய மற்றும் சொந்த பயன்பாட்டுக்கு ஏரி, குளங்களில் மண் எடுக்க அனுமதி கலெக்டர் தகவல்


விவசாய மற்றும் சொந்த பயன்பாட்டுக்கு ஏரி, குளங்களில் மண் எடுக்க அனுமதி கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 2 Jun 2019 10:45 PM GMT (Updated: 2 Jun 2019 7:15 PM GMT)

விவசாய மற்றும் சொந்த பயன்பாட்டுக்கு ஏரி, குளங்களில் மண் எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது என கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்தார்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஏரிகள், குளங்கள் மற்றும் கால்வாய்களில் இருந்து வண்டல் மண், சவுடு மண், களி மண் போன்ற சிறுவகை கனிமங்களை விவசாய பயன்பாட்டுக்காகவும், வீட்டு உபயோகம் மற்றும் மண்பாண்டம் செய்தல் போன்ற சொந்த பயன்பாட்டுக்காகவும், இலவசமாக எடுத்து கொள்ள இந்த ஆண்டும் அனுமதி வழங்கப் படுகிறது.

தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, திருவையாறு, ஒரத்தநாடு, பூதலூர், கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய வட்டங்களில உள்ள 1,951 ஏரிகள், குளங்கள் மற்றும் கால்வாய்களில் வண்டல் மண், சவுடு மண், களிமண் ஆகியவற்றை இலவசமாக எடுத்து பயன்படுத்தி கொள்ளலாம்.

இந்த மண் எடுப்பதற்கு விண்ணப்பதாரரின் இருப்பிடம் அல்லது விவசாய நிலமானது விண்ணப்பிக்கும் ஏரி, குளம், கால்வாய் அமைந்துள்ள வருவாய் கிராமத்திலோ, அதை சுற்றியுள்ள வருவாய் கிராமத்திலோ அமைந்திருக்க வேண்டும். விவசாய பயன்பாட்டுக்கு ஒரு ஏக்கர் நன்செய் நிலத்திற்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை 75 கனமீட்டருக்குள்ளும், ஒரு ஏக்கர் புன்செய் நிலத்திற்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை 90 கனமீட்டருக்குள்ளும் இலவசமாக மண் எடுத்து கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.

சொந்த பயன்பாட்டுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை 30 கனமீட்டருக்குள் மண் எடுக்க அனுமதி வழங்கப்படுகிறது. மண் எடுப்பதற்கு வழங்கப்படும் அனுமதிச்சீட்டு 20 நாட்கள் செல்லத்தக்கதாகும். எனவே விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் மண்பாண்டம் செய்பவர்கள் தங்களது விவசாய பயன்பாடு மற்றும் சொந்த பயன்பாட்டுக்கு ஏரிகள், குளங்கள் மற்றும் கால்வாய்களில் இலவசமாக மண் எடுத்து கொள்ள சம்பந்தப்பட்ட தாசில்தார்களிடம் விண்ணப்பித்து அனுமதி பெறலாம்.

மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story