மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தையொட்டி கலெக்டர் அலுவலகத்தில் முதல் முறையாக சிறப்பு மருத்துவ முகாம்


மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தையொட்டி கலெக்டர் அலுவலகத்தில் முதல் முறையாக சிறப்பு மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 3 Jun 2019 10:45 PM GMT (Updated: 3 Jun 2019 8:07 PM GMT)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வருபவர்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் முதல் முறையாக சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வருகை புரியும் முதியோர் மற்றும் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நேற்று முதல் முறையாக புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த முகாமை கலெக்டர் உமா மகேஸ்வரி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திங்கட் கிழமை தோறும் நடை பெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு பொதுமக்கள் அதிக அளவில் வருகின்றனர். மாவட்ட கலெக்டரிடம் மனு அளிப்பதற்கு இடைப்பட்ட நேரத்தில் மருத்துவ உதவிகள் தேவைப்படும் முதியோர் மற்றும் பார்வை குறைபாடு உள்ளவர்கள் எவ்வித சிரமமும் இல்லாத வகையில் கலெக்டர் அலுவலகத்திலேயே உரிய மருத்துவ குழுவினர்களை கொண்டு பரிசோதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

மனுக்களை எழுதி கொடுக்க நடவடிக்கை

மேலும் தொடர் சிகிச்சைகள் வழங்க வேண்டி இருந்தால் அவர்களுக்கென ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள வாகனத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து, தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் வழிவகை செய்யப்பட்டு உள்ளது. இதுதவிர மனு எழுதுவதற்கு பொதுமக்களுக்கு உதவிடும் வகையில் திங்கட்கிழமை தோறும் அரசுத்துறை பணியாளர்களை கொண்டு மனுக்களை எழுதி கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

குறிப்பாக மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வருகை புரியும் பொதுமக்களின் நியாயமான கோரிக்கைகள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டு உள்ளேன் என்றார். முகாமில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி டீன் மீனாட்சி சுந்தரம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சிவக்குமாரி, சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் கிருஷ்ணன், மருத்துவ குழுவினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story