ரெயில்களில் வந்த காங்கிரஸ், சிவசேனா எம்.எல்.ஏ.க்களிடம் திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு


ரெயில்களில் வந்த காங்கிரஸ், சிவசேனா எம்.எல்.ஏ.க்களிடம் திருட்டு  மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 26 Jun 2019 4:15 AM IST (Updated: 26 Jun 2019 2:22 AM IST)
t-max-icont-min-icon

வெவ்வேறு ரெயில்களில் வந்த காங்கிரஸ், சிவசேனா எம்.எல்.ஏ.க்களி டம் திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

மும்பை,

மராட்டிய மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதில் கலந்துகொள்ள ரெயில்களில் வந்த காங்கிரஸ், சிவசேனா எம்.எல்.ஏ.க்களிடம் மர்மநபர்கள் கைவரிசை காட்டி சென்று உள்ளனர்.

புல்தானாவில் உள்ள சிக்காலி தொகுதி எம்.எல்.ஏ.வாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுல் போந்ரே உள்ளார். இவர் மல்காபூரில் இருந்து மும்பைக்கு விதர்பா எக்ஸ்பிரசில் வந்தார். இதில், ரெயில் நேற்று முன்தினம் காலை கல்யாண் ரெயில் நிலையத்தில் 5-வது பிளாட்பாரத்தில் நின்று கொண்டு இருந்தது.

அப்போது, ரெயிலின் ஏ.சி. பெட்டிக்குள் நுழைந்த மர்ம ஆசாமி எம்.எல்.ஏ.வுடன் வந்த அவரது மனைவியின் பணப்பை, ஏ.டி.எம். கார்டு மற்றும் ஆவணங்களை திருடிச்சென்றார்.

இதேபோல நடந்த மற்றொரு சம்பவத்தில் புல்தானாவில் உள்ள மேகர் தொகுதி எம்.எல்.ஏ. சஞ்சய் ராய்முல்கர்(சிவசேனா) தேவகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஜல்னாவில் இருந்து மும்பை நோக்கி வந்து கொண்டு இருந்தார். நேற்று முன்தினம் காலை ரெயில் கல்யாண்- தானே ரெயில்நிலையங்களுக்கு இடையே வந்தபோது, தூக்கத்தில் இருந்து எழுந்தார்.

அப்போது அவரது செல்போன், ரூ.10 ஆயிரம் மற்றும் அடையாள அட்டை மாயமாகி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

ரெயிலில் எம்.எல்.ஏ.க்களிடம் மர்ம ஆசாமிகள் கைவரிசை காட்டி உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவங்கள் குறித்து கல்யாண் மற்றும் சி.எஸ்.எம்.டி. ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடிவருகின்றனர். இந்த சம்பவம் குறித்து ராகுல் போந்ரே சட்டமன்ற சபாநாயகரிடம் புகார் அளித்து உள்ளார். மேலும் இது குறித்து அவர் கூறியதாவது:-

தற்போது திருடர்களுக்கு தான் நல்ல காலம் (அச்சா தீன்) நடக்கிறது போல?. இது மிகவும் தீவிரமான பிரச்சினை. எம்.எல்.ஏ.க்களுக்கு என ஒதுக்கப்பட்ட பெட்டியில் திருட்டு சம்பவம் நடந்து உள்ளது. இதனால் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை கூட ஏற்படலாம். எம்.எல்.ஏ.க்களுக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களுக்கு என்னவெல்லாம் நடக்கும்?. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பிரச்சினையில் சஞ்சய் ராய்முல்கர் எம்.எல்.ஏ.வும் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார்.

Next Story