மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடாவிட்டால் பொதுமக்களை ஒன்று திரட்டி தொடர் போராட்டம் நடத்தப்படும்


மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடாவிட்டால் பொதுமக்களை ஒன்று திரட்டி தொடர் போராட்டம் நடத்தப்படும்
x
தினத்தந்தி 27 Jun 2019 11:00 PM GMT (Updated: 27 Jun 2019 7:41 PM GMT)

மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடாவிட்டால் பொதுமக்களை ஒன்று திரட்டி தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று காவிரி படுகை பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர் சாமி நடராஜன் கூறினார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகை, திருவாரூர், விழுப்புரம் உள்ளிட்ட 7 மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது. ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்து விவசாய நிலங்களையும், விவசாயிகளையும் பாதுகாப்பது தொடர்பாக நடந்த இந்த கூட்டத்தில் விவசாய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில் காவிரி படுகை பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர் சாமி நடராஜன் கலந்து கொண்டு பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

தமிழகத்தை பாலைவனமாக்க மத்திய அரசு முடிவு செய்து 400-க்கும் மேற்பட்ட இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு கிணறுகள் தோண்டப்படும் என்று அறிவித்து உள்ளது. ஏற்கனவே விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்த அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசு இந்த திட்டத்தை கைவிடக்கோரி மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, வருகிற 1-ந் தேதி 7 மாவட்டங்களில் பொதுமக்களை சந்தித்து பிரசாரம் நடத்தப்படும்.

9-ந் தேதி 7 மாவட்ட தலைநகரங்களில் ஏராளமான பொதுமக்களை ஒருங்கிணைத்து ஊர்வலம் நடத்தப்படும். இதே நிலை தொடர்ந்தால் பொது மக்களை ஒன்று திரட்டி தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம். தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மீத்தேன் திட்டத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்தாது என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். அதேபோல் சட்டமன்ற கூட்டத்தொடரில், மீத்தேன் மற்றும் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி அளிக்காது என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். ஜெயலலிதா வழியில் நாங்கள் ஆட்சி செய்கிறோம் என்று கூறி வரும் தமிழக முதல்-அமைச்சர் தீர்மானத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story