குடிபோதையில் தகராறு செய்த கணவன் ஊதுகுழலால் அடித்துக் கொலை மனைவிக்கு போலீசார் வலைவீச்சு


குடிபோதையில் தகராறு செய்த கணவன் ஊதுகுழலால் அடித்துக் கொலை மனைவிக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 7 July 2019 4:45 AM IST (Updated: 7 July 2019 12:43 AM IST)
t-max-icont-min-icon

வையம்பட்டி அருகே குடிபோதையில் தகராறு செய்த கணவனை ஊதுகுழலால் அடித்துக் கொன்ற மனைவியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வையம்பட்டி,

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே உள்ள வத்தமணியாரம்பட்டியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 42). கல் உடைக்கும் தொழிலாளி. இவருடைய மனைவி பஞ்சவர்ணம் (38). இந்த தம்பதிக்கு 3 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். முருகேசனுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் தினமும் குடித்து விட்டு, வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவும் குடிபோதையில் வீட்டிற்கு வந்த முருகேசனுக்கும், பஞ்வர்ணத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அப்போது திடீரென அங்கிருந்த அடுப்பு ஊதுவதற்கு பயன்படுத்தப்படும் ஊது குழலை பஞ்சவர்ணம் எடுத்து முருகேசனின் தலையில் கடுமையாக தாக்கியதாக தெரிகிறது. இதில் நிலை குலைந்து விழுந்த முருகேசன் உயிருக்கு போராடினார்.

அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகேசன் பரிதாபமாக உயிரிழந்தார். இதையறிந்த பஞ்சவர்ணம் தலைமறைவானார். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த வையம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது வீட்டின் முன் பகுதியில் ரத்தமாக கிடந்தது.

மேலும் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக் அங்கு வந்து அக்கம், பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினார். இதில், குடிபோதையில் தகராறு செய்ததால் முருகேசனை பஞ்சவர்ணம் அடித்துக் கொன்றது தெரியவந்தது.

இதையடுத்து அங்கிருந்தவர்களிடம், குடிப்பழக்கத்தினால் இதுபோன்ற சம்பவம் நிகழ்வது வேதனையாக உள்ளது. ஆகவே குடிப்பழக்கத்தை தவிர்த்து வாழ வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை வழங்கினார். இந்த கொலை சம்பவம் குறித்து வையம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அனுஷா மனோகரி வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள பஞ்சவர்ணத்தை வலைவீசி தேடி வருகிறார்.

Next Story