ஈரோட்டில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டாரா? - போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்


ஈரோட்டில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டாரா? - போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்
x
தினத்தந்தி 26 July 2019 11:03 PM GMT (Updated: 26 July 2019 11:03 PM GMT)

விபசார வழக்கில் கைது செய்யப்பட்டவர் ஈரோட்டில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டாரா? என்பது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

ஈரோடு,

ஈரோடு கருங்கல்பாளையம் கண்ணகி வீதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று முன்தினம் வெளிமாநில அழகிகளை வைத்து விபசாரம் நடத்தியதாக தேனி மாவட்டம் பெரியகுளம் மேற்கு தெருவை சேர்ந்த அஜ்மல்கான் (வயது35), மதுரை மாவட்டம் ஜெயந்திபுரத்தை சேர்ந்த பாபுகான் (26) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதில் அஜ்மல்கான் கடந்த பிப்ரவரி மாதம் தேனி மாவட்டம் கம்பத்தில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து ஜாமீனில் வந்த அஜ்மல்கான் ஈரோடு கருங்கல்பாளையம் கண்ணகி வீதியில் வாடகைக்கு வீடு எடுத்து அங்கு வெளி மாநில அழகிகளை வைத்து விபசார தொழில் நடத்தி வந்துள்ளார். மேலும் அஜ்மல்கான் பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுவதற்காக இங்கு வந்தாரா? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து போலீசார் ஒருவர் கூறும்போது, ‘கம்பம் பகுதியில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 66 ஆயிரம் கைப்பற்றப்பட்டன.

இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படுபவர் தேனி கம்பம் பகுதியை சேர்ந்த ஜாபருல்லா. இவருடைய மகன்தான் அஜ்மல்கான். ஜாபருல்லா பல ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு வங்காள மாநிலத்திற்கு சென்று, அங்கு ஒரு பெண்ணை திருமணம் செய்து, குடும்பத்துடன் வாழ்ந்து வந்துள்ளார். அப்போது அவருக்கு சில முக்கிய பிரமுகர்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கத்தின் மூலமாக கள்ள நோட்டுகளை தமிழகத்தின் பல பகுதிகளில் புழக்கத்தில் விட்டுள்ளார்.

இந்த கள்ள நோட்டுகள் பாகிஸ்தான் நாட்டில் அச்சடிக்கப்பட்டு, கப்பலில் கன்டெய்னர் மூலமாக சென்னை, கொல்கத்தா, மும்பை போன்ற நகரங்களுக்கு கொண்டு வரப்பட்டு ஏஜெண்டுகள் மூலமாக புழக்கத்தில் விட்டுள்ளனர். இந்த கள்ள நோட்டுகளை மாற்றுவதற்கு ஜாபருல்லா தனது மகன்கள் அஜ்மல்கான் மற்றும் சிக்கந்தர்பாஷா ஆகியோரை பயன்படுத்தி உள்ளார். அஜ்மல்கான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஈரோடு வந்து, பெரிய அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த முகமதுரபீக், மதுரை மாவட்டம் ஜெயந்திபுரத்தை சேர்ந்த பாபுகான் ஆகியோருடன் சேர்ந்து விபசார தொழில் நடத்தி வந்துள்ளார்.

இவர்கள் விபசார தொழிலுக்காக தான் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினார்களா? அல்லது கள்ள நோட்டுகளை மாற்றுவதற்காக தங்கினார்களா? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம். மேலும் ஈரோடு மாநகர் பகுதிகளில் பல லட்சம் ரூபாய் கள்ளநோட்டுகள் மாற்றப்பட்டுள்ளதாகவும் போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகிறது.


Next Story