சேலத்தில் கைதான வடமாநில கும்பலிடம் 3½ கிலோ தங்கம், ரூ.13 லட்சம் பறிமுதல் கேரளாவில் நகைக்கடையில் கொள்ளையடித்தது அம்பலம்


சேலத்தில் கைதான வடமாநில கும்பலிடம் 3½ கிலோ தங்கம், ரூ.13 லட்சம் பறிமுதல் கேரளாவில் நகைக்கடையில் கொள்ளையடித்தது அம்பலம்
x
தினத்தந்தி 29 July 2019 10:45 PM GMT (Updated: 29 July 2019 6:44 PM GMT)

சேலத்தில் கைதான வடமாநில கும்பலிடம் 3½ கிலோ தங்கம், ரூ.13 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் கேரளாவில் நகைக்கடையில் கொள்ளையடித்தது அம்பலமாகி உள்ளது.

சேலம், 

கேரள மாநிலம் பத்தினம்திட்டா நகர் நெய்யாட்டின்கரா பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்(வயது 45). இவர் அதே பகுதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் மராட்டிய மாநிலம் கனாபூர் அருகே உள்ள காவுவிடா கிராமத்தை சேர்ந்த அக்‌ஷய்(25) என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலைக்கு சேர்ந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை சுரேஷ் வழக்கம்போல் கடையை திறந்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அக்‌ஷய் உள்பட 2 பேர் மட்டும் பணியில் இருந்தனர். மாலையில், சொந்த வேலை காரணமாக நாகர்கோவிலுக்கு செல்வதாகவும், கடையை பார்த்துக்கொள்ளுமாறும் சுரேஷ் அவர்களிடம் கூறிவிட்டு சென்றார். அப்போது கடைக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் நகையை தேர்ந்தெடுத்து கொண்டிருந்தார்.

இந்த நிலையில், 5 பேர் கொண்ட கும்பல் திடீரென கடைக்குள் புகுந்தது. பின்னர் அந்த கும்பல் அக்‌ஷயை விட்டுவிட்டு மற்றொரு ஊழியரை தாக்கி, கை, கால்களை கட்டிப்போட்டனர். இதையடுத்து அந்த கும்பல் கடையில் இருந்து நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து கொண்டு தப்பி சென்றுவிட்டது. சிறிது நேரத்தில் அக்‌ஷயும் தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சுரேஷ் கடைக்கு சென்று பார்த்தார். அப்போது கடையில் இருந்து 3½ கிலோ தங்கம் மற்றும் ரூ.13 லட்சத்து 20 ஆயிரம் ஆகியவை கொள்ளை போனது தெரியவந்தது.

மேலும் பத்தினம்திட்டா நகர் போலீசாரும் நகைக்கடைக்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கடையில் புதிதாக சேர்ந்த ஊழியர் அக்‌ஷய் கொடுத்த தகவலின் பேரில் தான் இந்த கொள்ளை நடந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து போலீசார் தீவிரமாக விசாரித்தனர். இதில், இந்த கொள்ளையில் ஈடுபட்டது அவருடைய நண்பர்கள் தான் என்பதும், அவர்கள் சேலம் வழியாக வேறு ஒரு ஊருக்கு தப்பி செல்வதும் தெரியவந்தது.

இதுகுறித்து உடனடியாக சேலம் மாநகர போலீஸ் கமி‌ஷனர் செந்தில்குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் உத்தரவின் பேரில் போலீஸ் துணை கமி‌ஷனர் தங்கதுரை, உதவி கமி‌ஷனர் ஈஸ்வரன் மற்றும் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவில் மாநகர் முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

இதனிடையே உத்தமசோழபுரம் பகுதியில் வேகமாக வந்த ஒரு கார் சாலையின் நடுவில் இருந்த தடுப்பு கம்பியில் மோதி நின்றது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் தனிப்படை போலீசார் அங்கு விரைந்தனர். அப்போது அந்த காருக்குள் 5 பேர் இருந்தனர். வடமாநிலத்தை சேர்ந்த இவர்கள் போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணான தகவல்கள் கூறினர். இதையடுத்து அவர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது தான், அவர்கள் கேரளாவில் உள்ள நகைக்கடையில் கொள்ளையடித்த கும்பல் என்று தெரியவந்தது.

தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி கொண்டிருந்த போது, காரில் இருந்த ஒருவர் நைசாக கொள்ளையடித்த நகை, பணத்துடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து மற்ற 4 பேரையும் போலீசார் கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

இதில், அவர்கள் மராட்டிய மாநிலம் சாங்கிலி மாவட்டம் கனாபூர் அருகே உள்ள காவுவிடா கிராமத்தை சேர்ந்த கணபதி ஜாதோ (26), பிரசாத் ஜாதோ (20), ஆகாஷ்கரத் (28), காதாசாகிப் பிரபாகர் கைவத் (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய நிதின்ஜாதே (29) நெய்காரப்பட்டியில் சுற்றித்திரிந்தார். அவரை நேற்று அந்த பகுதியை சேர்ந்த 3 பேர் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து 3½ கிலோ தங்கம், ரூ.13 லட்சத்து 10 ஆயிரத்து 420 மற்றும் கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட கொள்ளை கும்பலிடம் போலீஸ் கமி‌ஷனர் செந்தில்குமார் விசாரணை நடத்தினார். அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட நகை, பணத்தை அவர் பார்வையிட்டார். மேலும் கொள்ளையர்களை கைது செய்தது குறித்து கேரள போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நியுமோன் தலைமையில் கேரள போலீசார் நேற்று கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். பின்னர் கொள்ளை கும்பலை சேர்ந்த 5 பேரும், கேரள போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் கொள்ளை கும்பலை கேரளாவிற்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

போலீஸ் கமி‌ஷனர் செந்தில்குமார், கொள்ளை கும்பலை பிடித்த தனிப்படை போலீசாரை பாராட்டி, பரிசு வழங்கினார். அதே போன்று தப்பி சென்ற கொள்ளையன் நிதின்ஜாதேயை பிடித்த நெய்காரப்பட்டியை சேர்ந்த கே.செல்வம், சக்திவேல், பி.செல்வம் ஆகிய 3 பேரை பாராட்டி அவர்களுக்கும் போலீஸ் கமி‌ஷனர் பரிசு வழங்கினார்.


Next Story