மாவட்ட நலவாரிய அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் - விசைத்தறி தொழிலாளர் சம்மேளன கூட்டத்தில் தீர்மானம்


மாவட்ட நலவாரிய அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் - விசைத்தறி தொழிலாளர் சம்மேளன கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 30 July 2019 11:42 PM GMT (Updated: 30 July 2019 11:42 PM GMT)

மாநிலம் முழுவதும் வருகிற 2-ந்தேதி மாவட்ட நலவாரிய அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என விசைத்தறி தொழிலாளர் சம்மேளன கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பள்ளிபாளையம்,

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் விசைத்தறி தொழிலாளர் சங்க அலுவலகத்தில் சம்மேளன மாநில நிர்வாகிகள் கூட்டம் சங்க மாநில தலைவர் முத்துசாமி தலைமையில் நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் சந்திரன், மாநில பொருளாளர் அசோகன், மாநில நிர்வாகிகள் சுப்பிரமணியம் மற்றும் மாநிலம் முழுவதும் இருந்து சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர்.

தமிழ்நாடு முழுவதும் முறை சாரா தொழிலாளர்களுக்கு செயல்படும் நலவாரிய செயல்பாடுகள், பணப்பயன்கள் தாமதம், பதிவு புதுப்பித்தல் போன்றவை எதுவும் நடைபெறவில்லை. உரிய காலத்தில் நிதி உதவிகள் கிடைக்காமல் விசைத்தறி தொழிலாளர்கள் உள்பட முறைசாரா தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளானார்கள். எனவே மாநிலம் முழுவதும் நலவாரிய அலுவலகங்கள் முன்பாக முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. சி.ஐ.டியு. சார்பில் நடைபெறும் இந்த போராட்டத்தில் விசைத்தறி தொழிலாளர்கள் திரளாக பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது.

மத்திய அரசு தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்தம் செய்து நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்துள்ளது. இது கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவான நடவடிக்கை ஆகும். இதன் காரணமாக தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்படுவது ஆபத்தான செயலாகும். எனவே இதுபோன்ற தொழிலாளர் விரோத போக்குகளை மத்திய அரசு கைவிட வேண்டும். விசைத்தறி தொழிலுக்கு இலவச மின்சாரம் 750 யூனிட்டில் இருந்து ஆயிரம் யூனிட் வழங்க வேண்டும்.

குமாரபாளையம், பள்ளிபாளையம் ஜவுளி உற்பத்திகள் நிறைந்த பகுதிகளில் ஜவுளி பூங்காக்கள் அமைக்க வேண்டும். விசைத்தறி தொழிலுக்கான நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். விலைவாசி உயர்வுக்கு ஏற்ப விசைத்தறி தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும். விசைத்தறி தொழிலாளர்கள் பெரும்பாலானோர் வாடகை வீடுகளில் வசித்து வருகின்றனர். இத்தொழிலில் ஈடுபடும் குடும்பங்களுக்கு அரசு சார்பில் இலவச வீட்டுமனை நிலம் வழங்க வேண்டும். 8 மணி நேர வேலையை உத்தரவாதப்படுத்த வேண்டும்.

பண்டிகை கால விடுமுறை மற்றும் பணிபுரியும் இடங்களில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றம் செய்திட வேண்டும் என மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் வருகிற 2-ந்தேதி மாநிலம் முழுவதும் மாவட்ட நலவாரிய அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.


Next Story