உடல்களை தகனம் செய்ய ரூ.8 ஆயிரம் கேட்ட கிராம பஞ்சாயத்து ஊழியர்கள்: உறவினர்கள் போராட்டம்- பரபரப்பு


உடல்களை தகனம் செய்ய ரூ.8 ஆயிரம் கேட்ட கிராம பஞ்சாயத்து ஊழியர்கள்: உறவினர்கள் போராட்டம்- பரபரப்பு
x
தினத்தந்தி 11 Aug 2019 11:04 PM GMT (Updated: 11 Aug 2019 11:04 PM GMT)

நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தாய்-மகளின் உடல்களை தகனம் செய்ய கிராம பஞ்சாயத்து ஊழியர்கள் ரூ.8 ஆயிரம் கேட்டனர். இதனை கண்டித்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

குடகு,

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. குறிப்பாக மலைநாடு என்று வர்ணிக்கப்படும் குடகில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அந்த மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி விராஜ்பேட்டை தாலுகா தோரா என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகள் மீது விழுந்து அமுக்கியது. இதில் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. மமதா(வயது 40), அவரது மகள் லிகிதா(15) ஆகியோர் பலியானார்கள். மேலும் 8 பேரை காணவில்லை. 8 பேரை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்த நிலையில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த மமதா, லிகிதாவின் உடல்கள் மீட்கப்பட்டு விராஜ்பேட்டையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நேற்று முன்தினம் மாலை குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில் மமதா, லிகிதாவின் உடல்களை தகனம் செய்வதற்காக விராஜ்பேட்டையில் உள்ள கிராம பஞ்சாயத்துக்கு சொந்தமான மயானத்திற்கு உறவினர்கள் எடுத்து சென்றனர். அப்போது அங்கு இருந்த கிராம பஞ்சாயத்து ஊழியர்கள் மமதா, லிகிதாவின் உடல்களை தகனம் செய்ய ரூ.8 ஆயிரம் தர வேண்டும் என்று கேட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் கிராம பஞ்சாயத்து ஊழியர்கள், மாநில அரசு, மைசூரு-குடகு தொகுதி எம்.பி. பிரதாப் சிம்ஹா ஆகியோரை கண்டித்து கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் சிலர் கிராம பஞ்சாயத்து ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் ரூ.8 ஆயிரம் தந்தால் தான் உடல்களை தகனம் செய்வோம் என்று கூறிவிட்டனர். இதை ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இதற்கிடையே மமதா, லிகிதாவின் உடல்களை தோரா கிராமத்திற்கு கொண்டு சென்ற உறவினர்கள் அங்கு குழிதோண்டி 2 பேரின் உடல்களையும் புதைத்தனர்.


Next Story