கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 2.73 லட்சம் கன அடி நீர் திறப்பு


கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 2.73 லட்சம் கன அடி நீர் திறப்பு
x
தினத்தந்தி 11 Aug 2019 11:15 PM GMT (Updated: 11 Aug 2019 11:15 PM GMT)

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 2.73 லட்சம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது

மண்டியா,

நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 2.73 லட்சம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் கபிலா, காவிரி ஆற்றங்கரையோர கிராமங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

கர்நாடகத்தில் கொட்டி தீர்த்து வரும் தென்மேற்கு பருவமழையால் 18-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. குறிப்பாக கேரள மாநிலம் வயநாடு, கர்நாடக மாநிலம் குடகு மாவட்டங்களில் இடைவிடாது கொட்டி தீர்த்து வரும் கனமழையால் மண்டியாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.), மைசூருவில் உள்ள கபினி அணைகளுக்கு நீர்வரத்து பலமடங்கு அதிகரித்தது. இதனால் இரு அணைகளில் இருந்தும் சராசரியாக ஒரு லட்சத்துக்கும் மேல் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இதனால் கபிலா, காவிரி ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

இந்த நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் நேற்று முன்தினம் இரவு கே.ஆர்.எஸ்., கபினி அணைகளுக்கு வினாடிக்கு லட்சக்கணக்கில் நீர் வந்தது. இதனால் 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் கிடுகிடு என உயர்ந்தது. கடந்த 9-ந்தேதி 100 அடியை கே.ஆர்.எஸ். அணை எட்டியது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 14 அடி நீர்மட்டம் உயர்ந்த நிலையில் கே.ஆர்.எஸ். அணையின் நீர் இருப்பு 114 அடியாக இருந்தது. அணையில் அதிகளவு தண்ணீர் நிரம்பி இருந்ததால் கடல் போல் தண்ணீரில் அலைகள் எழும்பின.

தொடர்ந்து அணைக்கு அதிகளவு நீர்வரத்து காரணமாக கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 119.25 அடியாக உயர்ந்தது. நேற்று மட்டும் அணையின் நீர்மட்டம் 5.25 அடி அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அணைக்கு வினாடிக்கு 1 லட்சத்து 86 ஆயிரத்து 723 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து ஒரு லட்சத்து 40 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. நேற்று இரவு 8 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 2 லட்சத்து 7 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 121 அடியாக உயர்ந்தது. இன்னும் அணை நிரம்ப 3 அடி மட்டுமே பாக்கி உள்ளது. இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 1.53 லட்சம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டது. இந்த நீர் காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதுபோல் கடல் மட்டத்தில் இருந்து 2,284.80 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையின் நேற்றைய நீர்மட்டம் 2,280.80 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 339 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. இதனால் அணையில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த அணையில் திறக்கப்பட்டுள்ள நீர் கபிலா ஆற்றில் ஆர்ப்பரித்து செல்கிறது. காவிரியும், கபிலாவும் மைசூரு மாவட்டம் டி.நரசிப்புரா அருகே திருமகூடலு சங்கமத்தில் சேர்ந்து அகண்ட காவிரியாக தமிழகம் நோக்கி பாய்ந்தோடி வருகிறது. இரு அணைகளில் இருந்தும் தமிழகத்துக்கு வினாடிக்கு 2.73 லட்சம் கனஅடி நீர் சென்று கொண்டிருக்கிறது.

காவிரியில் அபாய கட்டத்தை தாண்டி செல்லும் வெள்ள நீர் ஆற்றங்கரையோரத்தில் உள்ள மண்டியா, ஸ்ரீரங்கப்பட்டணா, கே.ஆர்.நகர், சாம்ராஜ்நகர், கொள்ளேகால் ஆகிய தாலுகாக்களில் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை சூழ்ந்துள்ளது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கே.ஆர்.எஸ். அணையில் இருந்து திறந்த நீர் காவிரி ஆற்றில் கரைபுரண்டு ஓடுவதால் ககனசுக்கி, பரசுக்கி நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அதுபோல் ஸ்ரீரங்கப்பட்டணாவில் உள்ள ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயம் முழுவதும் தண்ணீரில் மூழ்கி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இதனால் நேற்று முன்தினம் முதல் அங்கு அந்த பறவைகள் சரணாலயத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கே.ஆர்.எஸ். அணை பகுதிக்குள் சுற்றுலா பயணிகள் செல்லவும் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

கபிலா ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் டி.நரசிப்புரா, நஞ்சன்கூடு நகரத்தின் பெரும்பாலான பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் ஆன்மிக நகரங்களான இரு நகரங்களிலும் திரும்பிய பக்கமெல்லாம் தண்ணீர் தேங்கி தீவுகளாக காட்சி தருகிறது. வெள்ளம் புகுந்த பகுதிகளில் வசித்து வந்த மக்கள் மீட்கப்பட்டு, முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கபிலா, காவிரி ஆறுகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் நஞ்சன்கூடு-ஊட்டி, மைசூரு-பெங்களூரு உள்ளிட்ட முக்கிய சாலைகள் தண்ணீரில் மூழ்கி கிடக்கிறது. இதன் காரணமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.


Next Story