நாகர்கோவிலில் அதிகாரிகள் சோதனை: ரெயிலில் கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


நாகர்கோவிலில் அதிகாரிகள் சோதனை: ரெயிலில் கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 12 Aug 2019 10:45 PM GMT (Updated: 12 Aug 2019 8:48 PM GMT)

நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்துக்கு ரெயிலில் கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். எனினும் அதிகாரிகளுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு மறைமுகமாக அரிசி கடத்தல் சம்பவங்கள் நடைபெறுவதாக மக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். அதிலும் பெரும்பாலான அரிசி கடத்தல் சம்பவங்கள் ரெயில் மூலமாக நடைபெறுவதாகவும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. எனவே ஒவ்வொரு ரெயில் நிலையங்களிலும் அதிகாரிகள் திடீர் சோதனை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் பறக்கும் படை தாசில்தார் சதானந்தன் தலைமையில், துணை தாசில்தார் அருள்லிங்கம் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் நேற்று காலை 6 மணி அளவில் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அந்த சமயத்தில் திருவனந்தபுரத்துக்கு பயணிகள் ரெயில் புறப்பட தயாராக இருந்தது. உடனே அந்த பயணிகள் ரெயிலில் ஏறி அதிகாரிகள் சோதனை செய்தனர்.

ரேஷன் அரிசி பறிமுதல்

அப்போது ரெயிலில் இருக்கைகளுக்கு அடியில் ரேஷன் அரிசி மூடைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தன. இவற்றை கண்டுபிடித்த அதிகாரிகள் உடனே அரிசி மூடைகளை பறிமுதல் செய்தனர். அதில் ஒரு டன் ரேஷன் அரிசி இருந்தன. இந்த அரிசியை கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. ஆனால் அரிசியை கடத்த முயன்றவர்கள் பற்றிய விவரம் தெரியவில்லை. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பறிமுதல் செய்யப்பட்ட அரிசி மூடைகள் கோணத்தில் உள்ள குடோனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Next Story