ஊட்டி- கூடலூர் சாலையில் மண்சரிவு ஏற்படாமல் தடுக்க மணல் மூட்டைகளை அடுக்கும் பணி தீவிரம்


ஊட்டி- கூடலூர் சாலையில் மண்சரிவு ஏற்படாமல் தடுக்க மணல் மூட்டைகளை அடுக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 14 Aug 2019 10:45 PM GMT (Updated: 14 Aug 2019 5:57 PM GMT)

ஊட்டி-கூடலூர் சாலையில் மண்சரிவு ஏற்படாமல் தடுக்க மணல் மூட்டைகளை அடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை கனமழை கொட்டி தீர்த்தது. தொடர்ந்து பெய்த மழையால் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலைகள், நகராட்சி, பேரூராட்சி சாலைகளில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டன. சாலையின் குறுக்கே மரங்கள் முறிந்து விழுந்தது. இதனால் சில இடங்களில் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. அதனை தொடர்ந்து போர்க்கால அடிப்படையில் சாலைகளை தற்காலிகமாகவும், நிரந்தரமாகவும் சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

ஊட்டி உட்கோட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை எண் 67-ல் ஊட்டி முதல் கூடலூர் தொரப்பள்ளி வரை கனமழை காரணமாக பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் சீரமைப்பு பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகின்றன. கடந்த 7-ந் தேதி ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலை அனுமாபுரம் பகுதியில் சாலையின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது. அதனால் சுமார் 25 மீட்டர் நீளம், 8 மீட்டர் உயரத்திற்கு சாலையில் பாதிப்பு ஏற்பட்டது. அதன் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அந்த சாலை வழியாக தினமும் தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களின் அரசு பஸ்கள் சென்று வருகின்றன. சாலை பெயர்ந்து விழுந்ததால், போக்குவரத்து துண்டிக்கப்படும் அபாயம் இருந்தது. 2 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து தனியார் வேலையாட்கள் 65 பேர், 3 பொக்லைன் எந்திரங்கள், ஒரு டிராக்டர் பயன்படுத்தப்பட்டு அனுமாபுரம் பகுதியில் எம் சண்ட் மணல் மூட்டைகள் அடுக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அப்பகுதியில் மீண்டும் மண்சரிவு ஏற்படாமல் இருக்க சாய்வாக சுமார் 6 ஆயிரம் மணல் மூட்டைகள் அடுக்கப்படுகிறது. சாலையின் ஒருபுறத்தில் வாகனங்கள் தடையின்றி செல்லும் வகையில் சாலை சீரமைக்கப்பட்டு இருக்கிறது.

மற்ற இடங்களில் கூடுதலாக மணல் மூட்டைகள் அடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் மண்சரிவு ஏற்பட்ட இடங்களில் பொக்லைன் எந்திரங்கள் மூலம் மண் அகற்றப்பட்டது. சாலையின் குறுக்கே விழுந்த மரங்கள் அகற்றப்பட்டு போக்குவரத்து சரிசெய்யப்பட்டது. 6 இடங்களில் தடுப்புச்சுவர் உடைந்து சேதம் ஏற்பட்டு உள்ளது. அந்த பகுதிகளில் தற்காலிகமாக சாலை தடுப்புகள் அமைக்கப்பட்டு, வாகனங்கள் பாதுகாப்பாக சென்று வர வழிவகை செய்யப்பட்டு இருக்கிறது. தொடர் மழையால் சாலையில் ஏற்பட்ட பள்ளம் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு வருகிறது.

ஊட்டி அருகே டெரஸ் எஸ்டேட் செல்லும் சாலையில் அமைக்கப்பட்டு இருந்த பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உடைந்தது. அங்கு தற்போது தற்காலிகமாக 2 பெரிய குழாய்கள் அமைத்து சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. அதேபோல் அவலாஞ்சி, எமரால்டு பகுதியில் விவசாய விளைநிலங்களில் இருந்து அடித்து வரப்பட்ட மண் சாலையில் குவிந்து கிடக்கிறது. இதனால் சாலையே தெரியாத அளவுக்கு சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனை அகற்றும் பணியில் பொக்லைன் எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Next Story