தமிழகத்தில், பயங்கரவாதிகள் ஊடுருவல் எதிரொலி: வேளாங்கண்ணி பேராலயத்தில் பலத்த பாதுகாப்பு


தமிழகத்தில், பயங்கரவாதிகள் ஊடுருவல் எதிரொலி: வேளாங்கண்ணி பேராலயத்தில் பலத்த பாதுகாப்பு
x
தினத்தந்தி 24 Aug 2019 11:00 PM GMT (Updated: 24 Aug 2019 8:05 PM GMT)

தமிழகத்தில், பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து வேளாங்கண்ணி பேராலயத்தில் பலத்த பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கடல் பகுதியில் அதிவிரைவு ரோந்து படகுகள் மூலம் கண் காணிப்பு பணியும் நடந்து வருகிறது.

நாகப்பட்டினம்,

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் ஈஸ்டர் பண்டிகையின்போது தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 400-க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். இந்த தாக்குதலை நடத்திய தற்கொலைப்படை பயங்கரவாதிகளுடன் தமிழகத்தை சேர்ந்த சிலருக்கும் தொடர்பு இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து சென்னை, நாகை உள்ளிட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை(என்.ஐ.ஏ) அதிகாரிகள் சோதனை நடத்தியதில் சிலர் சிக்கினர். இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தை போன்று இந்தியாவிலும் அதுபோன்ற தாக்குதல் நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாகவும், இதற்காக இலங்கையில் இருந்து லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த 6 பயங்கரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவி இருப்பதாகவும் மத்திய உளவுத்துறை மூலம் தகவல் வந்தது.

வேளாங்கண்ணி பேராலயம்

இதையடுத்து மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. வேளாங்கண்ணி, சபரிமலை போன்ற மத வழிபாட்டு தலங்கள், வெளிநாட்டு பயணிகள் அதிகம் வரும் சுற்றுலா தலங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை தங்களது இலக்காக கொண்டு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இதனைத்தொடர்ந்து வேளாங்கண்ணி பேராலயத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

ஆண்டுதோறும் நடைபெறும் வேளாங்கண்ணி பேராலய திருவிழா வருகிற 29-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம்(செப்டம்பர்) 8-ந் தேதி வரை நடக்கிறது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக வெளியூர், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலாப்பயணிகளும், யாத்ரீகர்களும் வருவார்கள்.

விடுதிகளில் சோதனை

இதனால் இங்கு ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நிகழாத வண்ணம் ஏராளமான போலீசார் ஆயுதம் ஏந்தியபடி கண்காணித்து வருகின்றனர். தொடர்ந்து பேராலயத்தின் நுழைவு வாயிலில் பக்தர்களின் உடமைகள் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்யப்படுகிறது. அதன் பின்னரே பேராலயத்திற்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

மேலும் வேளாங்கண்ணியில் உள்ள தனியார் விடுதிகள், பேராலய விடுதிகள் உள்ளிட்டவற்றில் போலீசார் சோதனையில் சோதனையிட்டு வருகின்றனர். விடுதிகளில் தங்கி இருப்பவர்களின் பெயர் விவரம், முகவரி உள்ளிட்டவைகள் சரியாக உள்ளனவா? எனவும் ஆய்வு செய்து வருகின்றனர்.

கண்காணிப்பு கோபுரத்தில்...

பேராலய வளாக எல்லையில் வரும் அனைத்து வாகனங்களும் கண்காணிப்பு கேமரா மூலம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதோடு மட்டும் இல்லாமல் 140 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் வஜ்ரா மற்றும் ஈகிள் வாகனங்கள் வாயிலாகவும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பேராலயத்தை சுற்றிலும் 6 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் அந்த வழியாக வரும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி சோதனை செய்த பின்னரே தொடர்ந்து செல்வதற்கு அனுமதிக்கின்றனர். வேளாங்கண்ணி கடற்கரை பகுதியில் உள்ள கண்காணிப்பு கோபுரங்களில் தலா 2 போலீசார் நின்றபடி தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

கடல் பகுதியில் 24 மணிநேர ரோந்து

இதுதவிர கடல் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவலாம் என்பதால் கடலோர பாதுகாப்பு குழும கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கலிதீர்த்தான் உத்தரவின்படி இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் நாகை, நாகூர், வேளாங்கண்ணி, வேதாரண்யம் உள்ளிட்ட கடலோர எல்லையில் 2 அதி விரைவு ரோந்து படகுகள் மூலம் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பைனாகுலர் வாயிலாக 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.

மீனவர்களிடமும், யாரேனும் சந்தேகப்படும்படியாக மர்ம நபர்கள் வந்தால், தகவல் தெரிவிக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளனர். கடலோர பகுதிகளான தரங்கம்பாடி, பூம்புகார் உள்ளிட்ட பகுதிகளிலும் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சந்தேகத்தின்பேரில் கடலோர எல்லையில் படகுகள் அல்லது மர்ம நபர்கள் நடமாட்டம் இருந்தால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று மீனவ கிராமங்களில் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

நேற்று 3-வது நாளாக வேளாங்கண்ணி பேராலயம் முழுவதும் துப்பாக்கி ஏந்திய போலீசாரின் கழுகு பார்வைக்குள் உள்ளது. பேராலய திருவிழா தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பயங்கரவாத அச்சுறுத்தலால், வேளாங்கண்ணிக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் மற்றும் யாத்திரீகர்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story