தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்பொருட்களை மாணவர்கள் பயன்படுத்தினால் பள்ளி நிர்வாகத்துக்கு அபராதம்


தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்பொருட்களை மாணவர்கள் பயன்படுத்தினால் பள்ளி நிர்வாகத்துக்கு அபராதம்
x
தினத்தந்தி 6 Sep 2019 10:15 PM GMT (Updated: 6 Sep 2019 9:01 PM GMT)

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை மாணவர்கள் பயன்படுத்தினால் சம்பந்தப்பட்ட பள்ளிக்கூட நிர்வாகத்துக்கு அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மூலம் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

கூடலூர்,

நீலகிரி மாவட்டத்தின் இயற்கை எழிலை பாதுகாக்கும் பணியில் மாவட்ட நிர்வாகம் முழுமையாக ஈடுபட்டுள்ளது. இதனால் பிளாஸ்டிக்பொருட்கள் மற்றும் குடிநீரை பாட்டில்களில் அடைத்து விற்கவும் தடை விதித்துள்ளது. இதற்கு பதிலாக மாவட்டம் முழுவதும் தண்ணீர் ஏ.டி.எம். மையங்களை திறந்து பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளது. இதேபோல் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்பொருட்களை பொதுமக்கள் புழக்கத்துக்கு விடும் வணிக நிறுவனங்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்களில் படிக்கும் ஆயிரக்கணக்கான மாணவ- மாணவிகள் பிளாஸ்டிக்பொருட்களை பயன்படுத்த அனுமதிக்க கூடாது என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட, வட்டார கல்வி அலுவலர்களுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதையொட்டி அரசு, தனியார் பள்ளிக்கூட நிர்வாகங்களுக்கு முதன்மை கல்வி அலுவலகம் மூலம் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அதில் மாணவர்கள் தாங்கள் படிக்கும் புத்தகங்கள் மற்றும் நோட்டுகளின் மேற்புறம் பாலீத்தின் (லேமினேட்) தாள்களை பயன்படுத்த அனுமதிக்க வில்லை. தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக்பொருட்களையும் மாணவ-மாணவிகள் பயன்படுத்த அனுமதிக்க கூடாது. இதுகுறித்து மாணவர்கள், பெற்றோர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பள்ளிக்கூடங்களில் திடீர் சோதனை நடத்தப்படும்.

இந்த சமயத்தில் மாணவர்கள் பிளாஸ்டிக்பொருட்களை பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மற்றும் மாணவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து தனியார் பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளி நிர்வாகங்கள் பெற்றோருக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்பொருட்களை தங்களுடைய பிள்ளைகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

Next Story