‘நீட்’ தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான டாக்டர் வெங்கடேசன் தேனி கோர்ட்டில் ஆஜர்
‘நீட்’ தேர்வில் நடந்த ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்கில் சென்னையை சேர்ந்த டாக்டர் வெங்கடேசன் தேனி கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு வருகிற 21-ந்தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தேனி,
‘நீட்’ தேர்வில் நடந்த ஆள்மாறாட்டம் தொடர்பாக தேனி சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றிய வெங்கடேசன், அவருடைய மகன் உதித்சூர்யா உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட டாக்டர் வெங்கடேசன் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு கோர்ட்டு காவல் முடிவடைய இருந்த நிலையில், அவரை தேனி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில், மாஜிஸ்திரேட்டு பன்னீர்செல்வம் முன்னிலையில் போலீசார் நேற்று ஆஜர்படுத்தினர்.
பின்னர், டாக்டர் வெங்கடேசனுக்கு வருகிற 21-ந்தேதி வரை காவல் நீட்டித்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதையடுத்து அவரை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று மீண்டும் மத்திய சிறையில் அடைத்தனர்.
பரபரப்பான இந்த வழக்கில் மேலும் சில மாணவ, மாணவிகள் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டு இருக்க வாய்ப்புள்ளதாக சி.பி.சி.ஐ.டி. போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், மேற்கொண்டு யாரையும் போலீசார் கைது செய்யவில்லை.
இதேபோல் இந்த வழக்கில் முக்கிய நபர்களாக தேடப்படும் இடைத்தரகர்கள் 2 பேரும் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகின்றனர். இடைத்தரகர்களை பிடிக்க முடியாமல் சி.பி.சி.ஐ.டி. போலீசார் திணறி வருகின்றனர்.
Related Tags :
Next Story