திருப்பூரில் போலி பீடி தயாரித்தவர் கைது - 21 பண்டல்கள் பறிமுதல்


திருப்பூரில் போலி பீடி தயாரித்தவர் கைது - 21 பண்டல்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 1 March 2020 10:45 PM GMT (Updated: 2 March 2020 12:31 AM GMT)

திருப்பூரில் போலி பீடிகளை தயாரித்து கடைகளுக்கு விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 21 பண்டல்கள் பீடிகளை பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீ்ஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

அனுப்பர்பாளையம், 

திருப்பூர் அனுப்பர்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கடைகளுக்கு தங்களது நிறுவன பெயர் கொண்ட பீடிகளை போலியாக தயாரித்து ஒருசிலர் விற்பனை செய்து வருவதாக கோவை நூர்சேட் பீடி நிறுவனத்தின் மேலாளர் சானவாஸ் அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன் பேரில் அனுப்பர்பாளையம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள கடைகளில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன் தலைமையில் போலீசார் சோதனை நடத்தினார்கள்.

அப்போது ஒருசில கடைகளில் போலியான நூர்சேட் பீடிகள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அதை விற்பனை செய்தவரை பிடித்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர்.

இந்த நிலையில் நேற்று வழக்கம் போல போலியான பீடிகளை கடைகளுக்கு விற்பனை செய்வதற்காக வந்த நபரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினார்கள். இதில் அவர் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை சேர்ந்த ஆரோக்கியராஜ் என்பதும், அவர் தற்போது ஈரோடு மாவட்டம் கோபியில் குடும்பத்துடன் வசித்து வருவதும் தெரிந்தது. மேலும் ஆரோக்கியராஜ் கடந்த 2 மாதமாக பீடி விற்பனையில் ஈடுபட்டதும், திருநெல்வேலியில் இருந்து போலியான பீடிகளை விற்பனைக்காக வாங்கியதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதேபோல் அவர் விற்பனை செய்த பீடிகள் பெயர் லேபிள், பீடி உள்பட அனைத்தும் நூர்சேட் பீடியை போலவே இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ஆரோக்கியராஜை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ரூ.6 ஆயிரத்து 300 மதிப்புள்ள 21 பண்டல்கள் போலியான பீடிகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story