கொரோனா ஒழிப்புக்காக மதுரையை முடங்க வைத்த மக்கள் - விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கையிலும் ஆதரவு


கொரோனா ஒழிப்புக்காக மதுரையை முடங்க வைத்த மக்கள் - விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கையிலும் ஆதரவு
x
தினத்தந்தி 22 March 2020 10:45 PM GMT (Updated: 22 March 2020 10:45 PM GMT)

கொரோனா ஒழிப்பு விழிப்புணர்வுக்காக நடந்த மக்கள் ஊரடங்குக்கு மக்கள் அமோக ஆதரவு அளித்தனர். இதனால் மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கையில் சாலைகள் வெறிச்சோடின.

மதுரை, 

நாடு முழுவதும் கொரோனா ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அந்த நோய் பரவுதலை கட்டுப்படுத்தவும் 22-ந் தேதி ஒரு நாள் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று பிரதமர் மோடி கேட்டு கொண்டார். மேலும் அன்றைய தினம் டாக்டர்கள், செவிலியர்கள், பொது சேவையில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாலை 5 மணிக்கு அனைவரும் வீட்டின் மாடியில் நின்று கைதட்ட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இது மக்களின் ஊரடங்கு என்றும் அவர் குறிப்பிட்டார். அதன்படி நேற்று இந்தியா முழுவதும் மக்களின் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதற்கு மக்கள் அமோக ஆதரவு அளித்தனர்.

இந்த ஊரடங்கு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது. அதன்காரணமாக மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை ஆகிய நகரங்களிலும், அந்தந்த மாவட்டங்களிலும் உள்ள அனைத்து கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டு இருந்தன. பஸ்கள்-ஆட்டோக்கள் ஓடவில்லை. மக்களும் வீட்டை விட்டு வெளியேவர வில்லை. அதனால் மேற்கண்ட மாவட்டங் களில் அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன.

எப்போதும் பரபரப்பாக இயங்கும் மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையம், ரெயில் நிலையம், ஆரப்பாளையம் மற்றும் பெரியார் பஸ் நிலையங்கள் மக்கள் நடமாட்டமின்றி அமைதியாக இருந்தது. அதே போல் கோரிப்பாளையம், காளவாசல், பழங்காநத்தம், சிம்மக்கல், தெப்பக்குளம், தெற்குவாசல், அண்ணாநகர், மாவட்ட கோர்ட்டு, கீழவெளி வீதி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் வாகனங்கள் ஏதும் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. மக்களின் முழு ஆதரவு காரணமாக ஒட்டுமொத்தமாக மதுரை முடங்கி போனது.

இந்த மக்கள் ஊரடங்கில் இருந்து மருந்து கடைகள், பாலகம், பெட்ரோல் நிலையங்கள் மற்றும் இறைச்சி கடைகள் ஆகியவற்றிற்கு விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் நகரில் உள்ள 90 சதவீதத்திற்கும் அதிகமான மருந்து கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. முக்கிய சாலைகளில் உள்ள கடைகள் மட்டுமே திறந்து இருந்தன. பெரும்பாலான பெட்ரோல் நிலையங்கள் திறந்து இருந்தாலும் குறைந்தளவு ஊழியர்களுடன் தான் செயல்பட்டது. இருப்பினும் வாகனங்கள் இல்லாததால் பெட்ரோல் நிலையங்களும் வெறிச்சோடி இருந்தன. பாலகங்களை பொறுத்தவரை காலையில் மட்டுமே திறந்து இருந்தது. 8 மணிக்கு மேல் அனைத்து பாலகங்களிலும் பால் தீர்ந்து போய் விட்டது.

இறைச்சி கடைகளை பொறுத்தவரை நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை 7 மணி வரை செயல்பட்டது. பொதுவாக தீபாவளி பண்டிகைக்கு முந்தைய தினம் இரவு தான் இறைச்சி கடைகள் திறந்து இருக்கும். ஆனால் ஊரடங்கு காரணமாக இரவு நேரத்தில் இறைச்சி கடைகள் திறந்து இருந்தன. சில கடைகளில் பொதுமக்கள் கூட்டமாக நின்று இறைச்சி வாங்கினர். இரவில் திறந்து இருந்ததால் நேற்று 7 மணிக்கு முன்னதாகவே பெரும்பாலான இறைச்சி கடைகள் மூடப்பட்டன. அம்மா உணவகங்கள் வழக்கம் போல் செயல்பட்டதால் சிலர்் அதில் சென்று உணவு அருந்தினர்.

காலை 7 மணி முதல் வீட்டிற்குள் முடங்கி கிடந்த மக்கள் மாலை 5 மணிக்கு டாக்டர்கள், செவிலியர்கள், பொது சேவையில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வீட்டின் மாடி, பால்கனியில் வந்து நின்று கைதட்டினர். அடுக்குமாடி குடியிருப்பு மக்கள் ஒட்டுமொத்தமாக மாடிகளில் நின்று கைதட்டி தங்களது நன்றியை தெரிவித்து கொண்டனர். மாடி வீடு இல்லாதவர்கள், வீட்டின் முன்பு நின்று கைதட்டினர்.

மக்கள் ஒட்டுமொத்தமாக வீட்டில் முடங்கி இருந்தாலும், போலீசார், மருத்துவ ஊழியர்கள் ஆகியோர் நேற்று வழக்கம் போல் பணியில் ஈடுபட்டனர். சாலைகள் வெறிச்சோடி கிடந்தாலும் போக்குவரத்து போலீசார் பூத்களில் நின்று கொண்டனர். பூத் இல்லாத இடங்களில் போலீசார் சாலையின் ஓரத்தில் நின்று பணியாற்றினர். அதே போல் நகர் முழுவதும் ரோந்து பணியிலும் போலீசார் ஈடுபட்டனர். மருத்துவ துறை ஊழியர்கள் வழக்கம் போல் ஆஸ்பத்திரிக்கு சென்று பணியாற்றினர்.

Next Story