திருப்பூர் மாவட்டத்தில் சமூக தொற்று இல்லை - கலெக்டர் விஜயகார்த்திகேயன் தகவல்


திருப்பூர் மாவட்டத்தில் சமூக தொற்று இல்லை  - கலெக்டர் விஜயகார்த்திகேயன் தகவல்
x
தினத்தந்தி 6 April 2020 3:30 AM IST (Updated: 6 April 2020 2:10 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் சமூக தொற்று இல்லை. இதனால் கொரோனா வைரஸ் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று கலெக்டர் விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.

திருப்பூர், 

திருப்பூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தபோதும் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமையன்று இறைச்சி, மீன் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் சமூக இடைவெளியை மக்கள் பின்பற்றாததால் மாவட்ட நிர்வாகம் பெரும் அதிர்ச்சி அடைந்தது. இதைத்தொடர்ந்து இறைச்சி, மீன் கடைகளில் ஏற்கனவே குறிப்பிட்ட அளவு எடைபோட்டு டப்பா, பாக்கெட்டில் இறைச்சி, மீன் விற்பனை செய்ய மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது. அதன்படி நேற்று திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள இறைச்சி, மீன் கடைகளில் இந்த நடைமுறையை கடைபிடித்தனர்.

இந்த நிலையில் திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சி.டி.சி.கார்னர் பகுதியில் அமைந்துள்ள இறைச்சிக்கடை மற்றும் மீன் கடைகளில் கலெக்டர் விஜயகார்த்திகேயன் நேற்று காலை ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது-

கறிக்கடை, மீன்கடைகளில் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் மாநகராட்சி அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், போலீசார் ஆகியோருடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இறைச்சி கடைக்கு முன்பும் கோடுகள் வரையப்பட்டு மக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து இறைச்சி வாங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மீன், இறைச்சி ஆகியவற்றை 250 கிராம், 500 கிராம், 1 கிலோ என்று ஏற்கனவே பார்சல் செய்யப்பட்டு தயார் நிலையில் கடையில் வைக்கப்பட்டு இருக்கும். பொதுமக்கள் காலதாமதம் இல்லாமல் உடனடியாக வாங்கி செல்ல இந்த வசதி செய்யப்பட்டு இருந்தது.

கடைக்காரர்கள் இதை பின்பற்றுகிறார்களா என்று தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். ஒரு சில இடங்களில் நெருக்கடி இருந்தாலும் தன்னார்வலர்கள், காவல்துறையினர் மூலமாக ஒழுங்குபடுத்தி வருகிறோம். பொதுமக்களும் இதை பின்பற்றுகிறார்கள். கடந்த ஞாயிற்றுக்கிழமையைவிட இன்று(நேற்று) 70 சதவீதம் கூட்டம் இறைச்சிக்கடைகளில் குறைந்துள்ளது. மக்கள் இதை ஏற்றுக்கொண்டுள்ளனர். இனிவரும் காலங்களிலும் இந்த நடைமுறையை பின்பற்ற வேண்டும்.

கொரோனா வைரஸ் சமூக தொற்று என்பது திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை இல்லை. தனிமைப்படுத்தப்பட்டவர்களிடம் தொடர்பில் உள்ளவர்கள் மற்றும் சளி, காய்ச்சலுக்கு வந்தவர்கள் என அனைவருக்கும் ரத்தம், சளி மாதிரி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அது போன்றவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்றே முடிவு வந்துள்ளது. அதனால் பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து தென்னம்பாளையம் உழவர்சந்தை, தினசரி மார்க்கெட், ஏ.பி.டி. ரோடு, மங்கலம் ரோடு, கருவம்பாளையம், பாரப்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள இறைச்சி,மீன் கடைகளை கலெக்டர் சென்று பார்வையிட்டு கடைக்காரர்களிடம் அறிவுரை வழங்கினார்.

இந்த ஆய்வில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார், திருப்பூர் தெற்கு தாசில்தார் சுந்தரம் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Next Story