தனியார் நிறுவன ஊழியரின் வங்கி கணக்கில் ரூ.18 ஆயிரம் திருட்டு: மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை


தனியார் நிறுவன ஊழியரின் வங்கி கணக்கில் ரூ.18 ஆயிரம் திருட்டு: மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 30 April 2020 11:00 PM GMT (Updated: 30 April 2020 8:29 PM GMT)

தர்மபுரியில் செல் போனில் பேசி தனியார் நிறுவன ஊழியரின் வங்கி கணக்கில் ரூ.18 ஆயிரம் திருடிய மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தர்மபுரி,

தர்மபுரி பிடமனேரி பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் சேகர். இவருடைய செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர் சேகரின் வங்கி கணக்கு உள்ள ஒரு வங்கியில் இருந்து பேசுவதாக கூறி, வங்கி கணக்கை சரிபார்க்க ஏ.டி.எம். கார்டின் ரகசிய எண்ணை கூறும்படி கேட்டதாகவும், சேகர் அந்த ரகசிய எண்ணை கூறியதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சேகரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.18 ஆயிரத்தை யாரோ எடுத்து உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சேகர் இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட வங்கிக்கு நேரில் சென்று கேட்டுள்ளார். அப்போது அந்த வங்கியில் இருந்து செல்போன் மூலம் யாரும் பேசவில்லை என்று கூறி உள்ளனர்.

இதையடுத்து இந்த நூதன திருட்டு குறித்து சேகர் தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

அப்போது சேகரின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்ட நபர் சத்தீஸ்கார் மாநிலத்தில் இருந்து பேசியிருப்பது தெரியவந்தது. செல்போன் மூலம் பேசி வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்து மோசடியில் ஈடுபட்ட அந்த மர்ம நபர் யார்? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story