ஈரோட்டில் இருந்து வெளி மாநிலங்களுக்கு மஞ்சள் - ஜவுளி ஏற்றுமதி தொடங்கியது
ஈரோட்டில் இருந்து வெளி மாநிலங்களுக்கு மஞ்சள் மற்றும் ஜவுளி ஏற்றுமதி தொடங்கி உள்ளது.
ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தில் இருந்து மஞ்சள், ஜவுளிகள், எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஈரோடு மாநகர் பகுதிகளில் 74 லாரி புக்கிங் அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறன. ஈரோட்டில் புக்கிங் செய்யப்படும் பொருட்கள் லாரிகள் மூலம் ஆந்திரா, கேரளா, கர்நாடகா, டெல்லி, பஞ்சாப், மத்திய பிரதேசம், ஒடிசா, மராட்டியம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
மேலும் மதிப்பு கூட்டப்பட்ட ஜவுளி, அதனை சார்ந்த ஆயத்த ஆடைகள் ஆகியவற்றுக்கு தேவையான மூலப்பொருட்களும் வெளி மாநிலங்களில் இருந்து ஈரோட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, ஈரோட்டில் உள்ள லாரி புக்கிங் அலுவலகங்கள் கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி முதல் செயல்படவில்லை. இதன் காரணமாக சுமார் ரூ.5 ஆயிரம் கோடி அளவிற்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டதன் காரணமாக தற்போது லாரிகள் ஓடத்தொடங்கி உள்ளன. இதனால் ஈரோட்டில் இருந்து லாரிகள் மூலம் வெளி மாநிலங்களுக்கு மஞ்சள் மற்றும் ஜவுளிகள் அனுப்பப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக ஏற்கனவே புக்கிங் செய்யப்பட்ட பொருட்கள் தற்போது அனுப்பப்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு பகுதிகளில் உள்ள பொருட்கள் மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டு லாரிகளில் ஏற்றி வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. இதுகுறித்து ஈரோடு லாரி புக்கிங் ஏஜெண்ட் அசோசியேசன் துணைச்செயலாளர் கே.குமார் கூறியதாவது:-
ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி அத்தியாவசி பொருட்களை வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக தற்போது ஈரோட்டில் இருந்து பல்வேறு வெளி மாநிலங்களுக்கு மஞ்சள் மற்றும் ஜவுளி பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் இருந்து தினந்தோறும் ரூ.100 கோடி மதிப்பிலான சரக்குகள் வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். கடந்த 50 நாட்களுக்கும் மேலாக லாரிகள் ஓடாததால் எந்த ஒரு வர்த்தகமும் நடைபெறவில்லை. தற்போது ஏற்கனவே புக்கிங் செய்யப்பட்ட பொருட்கள் மட்டும் அனுப்பி வைக்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக மஞ்சள் மற்றும் ஜவுளி பொருட்கள் மட்டுமே வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
டேங்கர் லாரிகள் ஓடாததால் எண்ணெய் கொண்டு செல்லப்படவில்லை. வெளி மாநிலங்களுக்கு பொருட்கள் அனுப்ப புதிதாக யாரும் புக்கிங் செய்யவில்லை. மேலும் டிரைவர்கள் பற்றாக்குறையால் குறைந்த அளவிலான லாரிகள் மட்டுமே இயக்கப்படுகிறது. ஊரடங்கு உத்தரவு முழுமையாக விடுவிக்கப்பட்டால் மட்டுமே பழைய மாதிரி வர்த்தகம் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story