சுருக்கு வலையில் மீன்பிடிக்க எதிர்ப்பு; 2 மீனவர் கிராமத்தினர் மோதல் கற்களை வீசி தாக்கியதால் பரபரப்பு


சுருக்கு வலையில் மீன்பிடிக்க எதிர்ப்பு; 2 மீனவர் கிராமத்தினர் மோதல் கற்களை வீசி தாக்கியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 29 Jun 2020 3:13 AM GMT (Updated: 29 Jun 2020 3:13 AM GMT)

சுருக்கு வலையில் மீன்பிடிக்க எதிர்ப்பு தெரிவித்து வீராம்பட்டினம், வம்பாகீரப்பாளையம் மீனவர்கள் மோதிக்கொண்டதில் கற்களை வீசி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அரியாங்குப்பம்,

கடலில் சுருக்கு வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறி புதுவை மீனவர்கள் சிலர் சுருக்கு வலையை பயன்படுத்தி மீன்பிடித்து வருகிறார்கள். இதற்கு வீராம்பட்டினம் மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் நல்லவாடு மீனவர் கிராமத்தை சேர்ந்த விசைப்படகு ஒன்று சுருக்கு வலையை பயன்படுத்தி மீன்பிடித்து விட்டு நேற்று மாலை வீராம்பட்டினம் துறைமுக பகுதி வழியாக தேங்காய்திட்டு துறைமுகத்துக்கு வந்தது. விசைப்படகுடன் சுருக்கு வலைக்கு பயன்படுத்தப்படும் சிறிய படகுகளும் வந்தன.

கற்களை வீசி தாக்குதல்

விசைப்படகில் வந்த வம்பாகீரப்பாளையம் மீனவர்கள், சிறிய படகுகளுக்கு மாறுவதற்காக வீராம்பட்டினம் துறைமுக பகுதியில் இறங்கினர். இதைப் பார்த்த அப்பகுதி மீனவர்கள், சுருக்கு வலையை பயன்படுத்தி மீன்பிடித்தற்கு எதிர்ப்பு தெரிவித்து, வம்பாகீரப்பாளையம் மீனவர்களை திட்டி, அவர்களை நோக்கி கற்களை வீசினர். பதிலுக்கு அவர்களும் கற்களை வீசினர்.

இந்த மோதலில் வம்பாகீரப்பாளையத்தை சேர்ந்த கார்த்தி (வயது 38), திவாகர் (29) ஆகிய 2 மீனவர்கள் லேசான காயம் அடைந்தனர்..

இதை அறிந்த வம்பாகீரப்பாளையம் மீனவர்கள் தேங்காய்திட்டு துறைமுகத்தின் மறுகரையில் திரண்டனர். இதுபற்றி அறிந்து வீராம்பட்டினம் மீனவர்களும் துறைமுகத்தின் மற்றொரு கரையில் திரண்டனர். இரு கிராம மீனவர்களும் ஒருவரை ஒருவர் கடுமையாக பேசி தகராறில் ஈடுபட்டனர். இதனால் மீனவர் கிராமங்களுக்கு இடையே நேரடியாக மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.

போலீசார் பேச்சுவார்த்தை

தகவல் அறிந்த தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன், அரியாங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசெல்வம் மற்றும் போலீசார் வீராம்பட்டினம் கிராமத்துக்கு சென்று கடற்கரையில் திரண்டிருந்த மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்துபோக செய்தனர். முதலியார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார் தேங்காய்திட்டு சென்று, வம்பாகீரப்பாளையம் மீனவர்களை சமரசம் செய்தனர். இதையடுத்து மீனவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

கடற்கரையில் மீனவர்கள் திரண்டு வார்த்தைகளால் மோதிக்கொண்ட சம்பவம் இரு கிராமங்களில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story