வனத்துறையினரை தாக்கியவர்கள் மீது துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் வனத்துறை ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தல்


வனத்துறையினரை தாக்கியவர்கள் மீது துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் வனத்துறை ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 16 Sep 2020 3:27 AM GMT (Updated: 16 Sep 2020 3:27 AM GMT)

வனத்துறையினரை தாக்கியவர்கள் மீது துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் வனத்துறை ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தல்.

தேனி,

தமிழ்நாடு வன அலுவலர்கள் சங்க மாவட்ட செயலாளர் சாந்தகுமார் தலைமையில் தேனி மாவட்டத்தில் பணியாற்றும் வனத்துறை ஊழியர்கள் பலர் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். அங்கு மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். பின்னர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு சென்ற அவர்கள், போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வியிடம் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில், “கடந்த 11-ந்தேதி மேகமலை வனச்சரகத்தில் பணியாற்றும் வனவர் சரவணக்குமார், வனக்காப்பாளர் அப்துல்கபூர் ஆகியோரை காமன்கல்லூரை சேர்ந்த சிலர் தாக்கினர். இதில் அவர்கள் 2 பேரும் காயமடைந்து, சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா காலத்திலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து வன ஊழியர்களும் ஓய்வின்றி பணியாற்றி வருகின்றனர். அரசு பணியில் கடமையை செய்து வந்த வன ஊழியர்களை தரக்குறைவாக பேசி, தாக்குதல் நடத்திய நபர்கள் மீது மயிலாடும்பாறை போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கின் மீது துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வருங்காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று கூறியிருந்தனர்.

Next Story