முதல்-அமைச்சர் வீட்டை வவுச்சர் ஊழியர்கள் திடீர் முற்றுகை


முதல்-அமைச்சர் வீட்டை வவுச்சர் ஊழியர்கள் திடீர் முற்றுகை
x
தினத்தந்தி 17 Sept 2020 5:24 AM IST (Updated: 17 Sept 2020 5:24 AM IST)
t-max-icont-min-icon

முதல்-அமைச்சர் நாராயணசாமியின் வீட்டை வவுச்சர் ஊழியர்கள் திடீரென முற்றுகையிட்டனர். அப்போது போலீசாருடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி,

புதுவை அரசின் பொதுப் பணித்துறையில் பணியாற்றும் வவுச்சர் ஊழியர்கள் தங்களை தினக்கூலி ஊழியர்களாக மாற்றி மாதம் முழுவதும் வேலை தந்து ஊதிய உயர்வு வழங்கவேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த கோரிக்கைகளுக்காக சட்டசபை முற்றுகை, மேல்நிலை தொட்டியில் ஏறி போராட்டம், தர்ணா உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக கவர்னர், முதல்-அமைச்சர், அதிகாரிகளை சந்தித்து முறையிட்டும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. இதனால் பொதுப்பணித்துறை வவுச்சர் ஊழியர்கள் விரக்தி அடைந்தனர்.

இந்தநிலையில் நேற்று அரசு பணியாளர்கள் கூட்டமைப்பு தலைவர் சரவணன் தலைமையில் நூற்றுக்கணக்கானவர்கள் புஸ்சி வீதியில் திரண்டனர். அங்கிருந்து எல்லையம்மன் கோவில் வீதிக்கு வந்து முதல்-அமைச்சர் நாராயணசாமியின் வீட்டை முற்றுகையிட்டனர். அங்கு தரையில் அமர்ந்து தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களையும் எழுப்பினார்கள். ஊழியர்கள் போராட்டம் நடத்திய போது முதல்-அமைச்சர் நாராயணசாமி அங்கு இல்லை.

இதுபற்றி தகவல் அறிந்து ஒதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் அங்கு தடுப்புகள் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு ஏற்படாததைத் தொடர்ந்து வலுக்கட்டாயமாக அவர்களை போலீசார் கைது செய்தனர்.

அப்போது இருதரப்பினரும் லேசான கைகலப்பில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கைதான அனைவரும் கோரிமேடு போலீஸ் சமுதாய நலக்கூடத்தில் தங்கவைக்கப்பட்டனர். பின்னர் சிறிது நேரத்தில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்வரை தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்று ஊழியர்கள் தெரிவித்தனர்.

Next Story