பலத்த மழை: அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு


பலத்த மழை: அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 17 Sep 2020 1:50 AM GMT (Updated: 17 Sep 2020 1:50 AM GMT)

குமரி மாவட்டத்தில் பெய்த பலத்த மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தில் வெப்பம் தணிந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவுகிறது. அதோடு அணைகள் மற்றும் குளங்களிலும் போதுமான தண்ணீர் வந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் பல இடங்களில் நேற்று பலத்த மழை பெய்தது. மலையோர பகுதிகள், அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை கொட்டியது. நாகர்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அதிகாலையில் சிறிது நேரம் சாரல் மழை பெய்தது. அதன்பிறகு வழக்கம் போல வெயில் அடிக்க தொடங்கியது. எனினும் 9 மணிக்கு பிறகு மீண்டும் சிறிது நேரம் சாரல் மழை பெய்தது.

அணைகளுக்கு நீர்வரத்து

அதன்பிறகு மழை இல்லை. நன்றாக வெயில் அடித்தது. பின்னர் பகல் 1 மணி அளவில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை சுமார் 30 நிமிடங்கள் வரை நீடித்தது. இதன் காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையில் இருந்து தற்காத்து கொள்ள மக்கள் குடை பிடித்தபடி நடந்து சென்றனர். மழை ஓய்ந்த பிறகும் வானில் கருமேகங்கள் சூழ்ந்து இருந்தன.

குமரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பாலமோர் பகுதியில் 11.4 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. இதே போல நாகர்கோவில்-1.8, பூதப்பாண்டி-1, ஆனைகிடங்கு-1.2, முள்ளங்கினாவிளை-6 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து இருக்கிறது. அதாவது குமரி மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பேச்சிப்பாறை அணைக்கு நேற்று முன்தினம் 473 கனஅடியும், பெருஞ்சாணி அணைக்கு 249 கனஅடியும் தண்ணீர் வந்தது. இந்த நிலையில் நேற்று காலை பேச்சிப்பாறை அணைக்கு 491 கனஅடியும், பெருஞ்சாணி அணைக்கு 388 கனஅடியும், சிற்றார் 1 அணைக்கு 100 கனஅடியும் தண்ணீர் வந்தது. பகலில் பல அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் இந்த நீர்வரத்து மாலையில் மேலும் அதிகரித்தது.

பாசனத்துக்காக திறப்பு

அதே சமயம் பேச்சிப்பாறை அணையில் இருந்து 471 கனஅடியும், சிற்றார் 1 அணையில் இருந்து 100 கனஅடியும் தண்ணீர் பாசனத்துக்காக திறந்து விடப்பட்டு உள்ளது.

Next Story