கொரோனாவால் பாதிப்பு வீட்டை தகரத்தால் அடைக்க முயன்ற மாநகராட்சி ஊழியர்கள் விரட்டியடிப்பு


கொரோனாவால் பாதிப்பு வீட்டை தகரத்தால் அடைக்க முயன்ற மாநகராட்சி ஊழியர்கள் விரட்டியடிப்பு
x
தினத்தந்தி 14 Oct 2020 4:56 AM IST (Updated: 14 Oct 2020 4:56 AM IST)
t-max-icont-min-icon

கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் வீட்டை தகரத்தால் அடைக்க முயன்ற ஆவடி மாநகராட்சி அதிகாரிகளை பொதுமக்கள் விரட்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆவடி,

ஆவடி மாநகராட்சியில் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளது. இதுவரை 119 பேர் பலியாகி உள்ளனர். இதனால் நோய் பரவலை தடுக்க ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் தொற்றுக்குள்ளானவர்களின் வீடுகள் மற்றும் தெருக்களை தகரத்தால் அடைத்து தனிமைப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் ஆவடி மாநகராட்சி 36-வது வார்டுக்குட்பட்ட ஆவடி, பாலாஜி நகரில் நோய்தொற்று பாதிக்கப்பட்ட நபரின் வீட்டை தகரத்தால் அடைக்க அதிகாரிகள் சென்றனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து கடந்த 15 நாட்களாக இப்பகுதியில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது.

அதிகாரிகள் விரட்டப்பட்டனர்

இதனால் துர்நாற்றம் வீசுவதோடு நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டும் குப்பைகளை எடுக்க யாரும் வரவில்லை. ஆனால் வீட்டை தகரத்தால் அடைக்க மட்டும் வருவீர்களா? என கேள்வி கேட்டு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவர்களை விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பொதுமக்களிடமிருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியதால் கொரோனா தொற்றுக்குள்ளானவரின் வீட்டு வாசலை தகரத்தால் அடைக்கும் முயற்சியை மாநகராட்சி அதிகாரிகள் கைவிட்டு அங்கிருந்து சென்றனர்.

Next Story