ஒரே நாளில் 106 பேருக்கு கொரோனா 2 முதியவர்கள் பலி


ஒரே நாளில் 106 பேருக்கு கொரோனா 2 முதியவர்கள் பலி
x
தினத்தந்தி 14 Oct 2020 12:16 AM GMT (Updated: 14 Oct 2020 12:16 AM GMT)

ஈரோடு மாவட்டத்தில் 106 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் 2 முதியவர்கள் பலியானார்கள்.

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் ஏறுமுகமாகவே உள்ளது. நோய் தொற்று கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், தினமும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. 100-க்கும் மேற்பட்டவர்கள் புதிதாக பாதிக்கப்படுவதால் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கையும் ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது.

இந்தநிலையில் நேற்றும் ஒரே நாளில் ஈரோடு மாவட்டத்தில் 106 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் நோய் தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்து 527 ஆக உயர்ந்தது. அதேசமயம் நேற்று மட்டும் 160 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர். இதுவரை மொத்தம் 7 ஆயிரத்து 391 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளனர்.

முதியவர்கள் பலி

கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலியாகி உள்ளனர். இதில் ஈரோடு திண்டல் பகுதியை சேர்ந்த 82 வயது முதியவர் தனியார் ஆஸ்பத்திரியிலும், திருநகர்காலனியை சேர்ந்த 81 வயது முதியவர் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியிலும் கொரோனாவுக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர்.

இதனால் ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 104 ஆக உயர்ந்தது.

Next Story