மத்திய அரசு வழிகாட்டுதலின்படியே 7.5 சதவீத ஒதுக்கீடுக்கு அனுமதி தராமல் கவர்னர் தள்ளிப் போடுகிறார் தொல்.திருமாவளவன் எம்.பி. குற்றச்சாட்டு


மத்திய அரசு வழிகாட்டுதலின்படியே 7.5 சதவீத ஒதுக்கீடுக்கு அனுமதி தராமல் கவர்னர் தள்ளிப் போடுகிறார் தொல்.திருமாவளவன் எம்.பி. குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 29 Oct 2020 12:32 AM GMT (Updated: 29 Oct 2020 12:32 AM GMT)

மத்திய அரசு வழிகாட்டுதலின்படியே அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத ஒதுக்கீடு வழங்க அனுமதிப்பதை கவர்னர் தள்ளிப் போடுகிறார் என்று தொல்.திருமாவளவன் எம்.பி. குற்றஞ்சாட்டினார்.

புதுச்சேரி,

மருத்துவ படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே வழங்க வேண்டும் என வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புதுவை அண்ணா சிலை அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. விடுதலை சிறுத்தைகளின் புதுவை மாநில முதன்மை செயலாளர் தேவ.பொழிலன் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி அமைப்பாளர் தொல்.திருமாவளவன் எம்.பி. உரையாற்றினார். கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் எம்.பி., காங்கிரஸ் துணைத்தலைவர் நீல.கங்காதரன், சிறுபான்மை பிரிவு தலைவர் சூசைராஜ், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநிலக்குழு உறுப்பினர் முருகன் உள்பட கூட்டணி கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது தொல்.திருமாவளவன் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் 50 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்காததற்கு மத்தியில் ஆளும் மோடி அரசுதான் முழு பொறுப்பு. மத்திய அரசின் இந்த தவறான முடிவினால் 500 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க. என்றாலே இரட்டை வேடம் போடும் கட்சி. மக்களிடம் ஒன்றை சொல்லி நிர்வாகத்தில் மற்றொன்றை செய்வார்கள்.

பாரதீய ஜனதாவால் சமூக நீதி குழிதோண்டி புதைக்கப் படுகிறது. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படிதான் தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க முடிவு எடுக்காமல் கவர்னர் தள்ளிப்போடுகிறார். இதனை கண்டுகொள்ளாமல் அரசியல் கட்சிகள் வேடிக்கை பார்ப்பதுடன் பாரதீய ஜனதாவிற்கு ஆதரவாக இருப்பது வேதனை தருகிறது.

பா.ஜ.க.வினர் அநாகரீகமாக பேச காவல்துறையினர் அனுமதிப்பது கண்டிக்கத்தக்கது. காவல்துறை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதா? இல்லை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதா? என்ற கேள்வி எழுகிறது. தனிநபரை விமர்சித்து போராட்டங்கள் நடத்துவது ஆச்சரியமாக உள்ளது. இதனை தமிழக காவல்துறை வேடிக்கை பார்ப்பது கண்டனத்துக்குரியது.

தமிழகத்தில் மதவெறிக்கு சிவப்பு கம்பளம் விரிக்கும் செயலாகவே இது அமைந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக பாரதீய ஜனதா கட்சியினர் தனிநபர் விமர்சனத்தை கடைப்பிடித்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகர் சூர்யா, அவரது மனைவி ஆகியோர் மிரட்டப்பட்டு இருக்கிறார்கள்.

பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு கேட்கும் ஒரே கட்சியாக விடுதலை சிறுத்தைகள் உள்ளது. தற்போது நடக்கும் போராட்டங்கள் என்பது விடுதலை சிறுத்தைகளுக்கு எதிரானது அல்ல. பெண்களுக்கு எதிரான போராட்டமாகவே நான் கருதுகிறேன். மனுதர்மத்தை காட்டி என்னை அச்சுறுத்த முடியாது. பெண்களை அவமானப்படுத்தியவரை மதுரை எய்ம்ஸ் நிர்வாக குழு உறுப்பினராக நியமித்தது கண்டிக்கத்தக்கது. அவரை நீக்கவேண்டும். இதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி போராட்டம் நடத்தும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story