தென்காசியில் இந்து முன்னணியினர் திடீர் ஆர்ப்பாட்டம்
தென்காசியில் 2 தொழிலாளர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து நேற்று இந்து முன்னணியினர் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசி,
தென்காசியில் கடைகளுக்கு சாம்பிராணி புகை போடும் ஒருவரை கோழி கடைக்காரர் தாக்கியது குறித்து சமூக வலைதளங்களில் வீடியோ வெளியானது. இதனைத்தொடர்ந்து தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த கோழி கடைக்காரரை கைது செய்தனர்.
இதேபோன்று புதுமனை தெருவில் நீண்டகாலமாக துணிகளுக்கு இஸ்திரி போடும் பணியை செய்து வந்த சலவைத்தொழிலாளியை சிலர் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
ஆர்ப்பாட்டம்
இந்த நிலையில் தென்காசி புதிய பஸ் நிலையம் அருகில் நேற்று மாலை இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் உள்பட அந்த அமைப்பினர் திரண்டனர். அவர்கள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொழிலாளிகள் 2 பேர் தாக்கப்பட்டதை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
அப்போது வி.பி.ஜெயக்குமார் கூறுகையில், ‘அனைத்து மதத்தினரும் இணக்கமாக வாழ்ந்து வருகிறோம். தென்காசியில் 2 தொழிலாளிகள் தாக்கப்பட்டு உள்ளனர். இங்கு சுமுக நிலையை ஏற்படுத்த போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நேரடியாக தலையிட்டு இந்த பிரச்சினைகளில் சுமுக தீர்வை ஏற்படுத்த வேண்டும்’ என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் குற்றாலநாதன், கோட்ட செயலாளர் சக்திவேல், மாவட்ட பொதுச் செயலாளர் மணிகண்டன், மாவட்ட செயலாளர் சிவா, மாவட்ட துணைத்தலைவர் முருகன், வக்கீல் அணி மாவட்ட தலைவர் சாக்ரடீஸ், நகர தலைவர் நாராயணன், நகர செயலாளர் பாலாஜி, பஜ்ரங்தள் மாவட்ட அமைப்பாளர் சபரி மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story