கல்பாக்கம் அருகே கிணற்றில் சகோதரிகள் பிணம் போலீசார் விசாரணை
கல்பாக்கம் அருகே கிணற்றில் சகோதரிகள் பிணமாக மிதந்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்பாக்கம்,
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த ஆமைப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் அரிகிருஷ்னன். கூலித்தொழிலாளி. இவரது மனைவி கீதா. ஒரு மகன் உள்ளார். மகள்கள் பிரியங்கா (13), செண்பகவல்லி (11). இவர்களில் பிரியங்கா நெய்குப்பி கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். செண்பகவல்லி கல்பாக்கம் அடுத்த வெங்கம்பாக்கம் அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் அரிகிருஷ்ணன், கீதா இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். பிற்பகல் 3 மணி முதல் சகோதரிகளான பிரியங்கா, செண்பகவல்லி இருவரும் மாயமாகி விட்டனர்.
பிணமாக மீட்பு
பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவர்களை பல்வேறு இடங்களில் தேடினர். இந்தநிலையில் நேற்று அதிகாலை அருகில் உள்ள கிணற்றில் 2 சிறுமிகளின் உடல்கள் மிதப்பதை பார்த்த பொதுமக்கள் இது குறித்து சதுரங்கப்பட்டினம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து அவர்களது உடல்களை மீட்டனர்.
அவர்கள் மாயமான சகோதரிகளான பிரியங்கா, செண்பகவல்லி என்பது தெரியவந்தது. அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்படடது. அவர்கள் எப்படி இறந்தார்கள்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story